விமானத்தில் நடுவானில் தாக்குதல்… 174 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி- தேசிய விருது வழங்க கோரிக்கை!

Published On:

| By Mathi

Indian-Pilot

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற விமானத்தில் நடுவானில் நடந்த பயங்கரவாத தாக்குதலின்போது 172 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு (Smit Machchhar) பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு Flydubai நிறுவனத்தின் FZ1073 விமானம் சென்று கொண்டிருந்தது. விமானத்தில் 172 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இஸ்ரேலியர்கள்.

ADVERTISEMENT

விமானத்தை இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் இயக்கினார். அவருடன் ஓமன் நாட்டை சேர்ந்த இணை விமானியும் இருந்தார்.

நடுவானில் பயங்கரவாத தாக்குதல்

விமானம் 34 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, இணை விமானி திடீரென கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கினார். இதனால் ஸ்மித் மச்சார் நிலைகுலைந்த நேரத்தில் விமானம் மிக வேகமாக கீழே இறங்கியது. அதாவது சுமார் 30 விநாடிகளில் 14 ஆயிரம் அடிக்கும் அதிகமாக விமானம் கீழிறங்கியது. ஆனால் ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும் ஸ்மித் மச்சார் விமானத்தை சீராக இயக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இதனிடையே விமானி அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் பயணிகள் அந்த அறையை நோக்கி ஓடினர். கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், ரத்தம் வழிந்தபோதும் ஸ்மித் மச்சார், விமானி அறையின் கதவை திறந்தார். கதவு திறந்ததும் உள்ளே புகுந்த பயணிகளும் விமான ஊழியர்களும் இணை விமானியை மடக்கிப் பிடித்தனர்.

172 பேரும் உயிர் தப்பினர்

ஸ்மித் மச்சார் படுகாயமடைந்ததால், விமானத்தில் பயணம் செய்த Flydubai நிறுவனத்தை சேர்ந்த மற்ற விமானிகள் விமானத்தை இயக்கினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தாபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

ADVERTISEMENT

இணை விமானியை சவுதி அதிகாரிகள் கைது செய்தனர். காயமடைந்த ஸ்மித் மச்சார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் முயற்சி என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பின்னர் சவுதி அரேபியாவின் தாபூக்கில் இருந்து Flydubai மாற்று விமானத்தில் அழைத்து செல்லப்பட்ட பயணிகள், இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தை பாதுகாப்பாக சென்றடைந்தனர்.

யார் இந்த ஸ்மித் மச்சார்?

இந்தியாவை சேர்ந்த ஸ்மித் மச்சார், 2022ஆம் ஆண்டு முதல் Flydubai நிறுவனத்தில் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

அதற்கு முன்பு 10 ஆண்டுகளுக்கும் மேலாக SpiceJet நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். Boeing 737 விமானங்களை இயக்கிய நீண்ட அனுபவம் கொண்டவர்.

தேசிய விருது வழங்க கோரிக்கை

ரத்தம் வழிந்த நிலையிலும் விமானி அறையின் கதவை திறந்து, பயணிகளும் விமான ஊழியர்களும் உள்ளே வர வழி ஏற்படுத்திய ஸ்மித் மச்சாருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஸ்மித் மச்சாருக்கு தேசிய விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share