துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற Flydubai விமானத்தில் நடுவானில் விமானிகளிடையே நடந்த மோதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளதாவது: இந்த விமானத்தில் பயணித்தவர்கள் பெரும்பாலானோர் இஸ்ரேலியர்கள். விமானம் இஸ்ரேலை நெருங்கியபோது, ஒரு விமானி மற்றொரு விமானியை கத்தியால் குத்தினார். பின்னர் பயணிகளுடன் விமானத்தை மோதி விபத்துக்குள்ளாக்க முயன்றதாக தெரிகிறது.
விமானத்தில் இருந்த இஸ்ரேலிய பயணி ஒருவரிடம் நான் பேசினேன். அவர் விமான ஊழியர் ஒருவருடன் சேர்ந்து விமானி அறைக்குள் நுழைந்துள்ளார். அப்போது கத்தியால் தாக்கிய விமானி, விமானத்தின் சில கருவிகளை சேதப்படுத்த முயன்றுள்ளார். அவரை இருவரும் சேர்ந்து தடுத்துள்ளனர்.
பின்னர் மற்றொரு விமானி, விமானி அறைக்குள் சென்று விமானத்தை பாதுகாப்பாக இயக்கியுள்ளார். துணிச்சலுடன் செயல்பட்ட இவர்களை நான் பாராட்டுகிறேன். இவர்களால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கத்தியால் தாக்கிய விமானி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சவுதி அரேபிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக இஸ்ரேல் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சொன்னது என்ன?
இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதாவது: துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி வந்த Flydubai விமானத்தை, அதில் இருந்த 174 பயணிகளுடன் விபத்துக்குள்ளாக்க முயற்சி நடந்துள்ளது. இது ஒரு ஜிகாதி பயங்கரவாத தாக்குதல் முயற்சி.
விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் துணிச்சலுடன் விமானி அறைக்குள் நுழைந்து, இந்த சதித் திட்டத்தை முறியடித்தனர். விமானத்தில் இருந்த பயணிகளின் துணிச்சலால் மிகப்பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டது. இவ்வாறு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் India Today தொலைக்காட்சியின் பூஜா ஷாலியிடம் பேசிய i24NEWS செய்தியாளர் கை அஸ்ரியல், ”துணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர். அவர்தான் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தவர். விமானத்தின் முதன்மை பைலட்டாக பணியாற்றியவர் இந்தியர். அவரைத்தான் துணை விமானி கத்தியால் குத்த முயன்றுள்ளார். இந்த தகவல்களை இஸ்ரேல் அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர்” என்றார்.

யார் அந்த இந்திய பைலட்?
இதனிடையே இஸ்ரேலின் சேனல் 12, விமானத்தின் கேப்டனை “இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்” என்று தெரிவித்துள்ளது. Ynet செய்தி நிறுவனம் அவரை “இந்திய நாட்டைச் சேர்ந்தவர்” என்று குறிப்பிட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இந்திய பைலட் குஜராத்தைச் சேர்ந்த ஸ்மித் மச்சார் என்றும், 10 ஆண்டுகளுக்கும் மேலான விமானப் பணி அனுபவம் கொண்டவர் என்றும், இதற்கு முன்பு SpiceJet நிறுவனத்தில் பணியாற்றியவர் என்றும் India Today தெரிவித்துள்ளது.
நடுவானில் பயங்கரம்
விமானி அறையில் இந்த மோதல் நடந்தபோது, விமானம் திடீரென ஆயிரக்கணக்கான அடி கீழே இறங்கத் தொடங்கியது. இதனால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், விமானத்தில் இருந்து அவசரகால சிக்னல்களும் அனுப்பப்பட்டுள்ளன.
இதையடுத்து மற்றொரு விமானி விமானத்தை இயக்கியுள்ளார். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
காயமடைந்த கேப்டன் மற்றும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் துணை விமானி ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
