ஃப்ளைதுபாய் விமானத்தில் கத்தி குத்து காயங்களுடன் போராடி, 174 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.
துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் நேற்று (செப்டம்பர் 30) நடுவானில் சக விமானியால் ஸ்மித் மச்சார் கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த நிலையிலும் சக விமானியுடன் போராடிய அவர், விமானிகள் இருக்கும் அறையின் கதவை திறந்தார். உடனே உள்ளே சென்ற பயணிகளும் விமான ஊழியர்களும் தாக்குதல் நடத்திய சக விமானியை மடக்கிப் பிடித்தனர்.
அதன்பிறகு விமானத்தில் இருந்த மற்ற விமானிகள் விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கினர். அங்கிருந்து விமானம் பின்னர் டெல் அவிவ் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

இதனிடையே 174 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை பாராட்டி நெதன்யாகு வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலுக்கு எனது சல்யூட். கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையிலும் அவர் போராடினார். விமானிகள் இருக்கும் அறையின் கதவை திறந்தார். இதனால் பயணிகளும் விமான ஊழியர்களும் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்தனர்.
இதன் மூலம் மிகப்பெரிய விமான விபத்தை தடுத்து, இஸ்ரேலியர்கள் உட்பட 174 பேரின் உயிரை அவர் காப்பாற்றியுள்ளார். ஸ்மித் மச்சார் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அவர் உண்மையான ஹீரோ” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்மித் மச்சார் உடல்நிலை எப்படி?
படுகாயமடைந்த விமானி ஸ்மித் மச்சார் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “ஸ்மித் மச்சாருக்கு மருத்துவமனையில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
