ஜெம் வீரமணி வழக்கு : எஸ்.ஐ.டியில் இருந்து விலகிய கீதாஞ்சலி ஐபிஎஸ் – ஏன்?

Published On:

| By Kavi

ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து துணை ஆணையர் கீதாஞ்சலி விலகியுள்ளார். 

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

இந்த வழக்கை தற்போது தேன்மொழி ஐபிஎஸ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

இந்த குழுவில், திஷா மிட்டல், முத்தரசி, கீதாஞ்சலி ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். 

ADVERTISEMENT

இவர்களில் ஒருவரான கீதாஞ்சலி தற்போது, சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து விடுவிக்க கோரி அந்த குழுவின் தலைவர் தேன்மொழி ஐபிஎஸ் மற்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

கீதாஞ்சலிக்கு பதிலாக கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையராக பணியாற்றி வரும் கீதா சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவு இதுவரை வெளியாகவில்லை. 

ADVERTISEMENT

அதேசமயம் கீதாஞ்சலி ஏன் இந்த குழுவில் இருந்து விலகினார் என்ற தகவலும் வெளியாகாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் வாதங்களை முன்வைத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘தனிப்பட்ட காரணங்களுக்காக கீதாஞ்சலி இந்த குழுவில் இருந்து விலகுகிறார்’ என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பதவி வகித்தபோது, கீதாஞ்சலி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share