சிபிஐ அதிகாரிகள் ஆப்ரிக்காவில் இருந்து வருவார்களா?: ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி கேள்வி!

Published On:

| By Kavi

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஜெம் கிரானைட் நிறுவனத்தின் தலைவர் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

இந்த வழக்கை தேன்மொழி ஐபிஎஸ் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது. 

இந்த நிலையில் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அதில், முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் தலையீட்டின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் அடையாளம் காணவில்லை. விசாரணையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பான புகாரில் வீரமணி, சாந்தியின் பெயர்கள் இருந்தும் போலீசார் சரிவர விசாரிக்கவில்லை. 

ADVERTISEMENT

அதோடு இந்த வழக்கை இழுத்து மூடுவதற்கு 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் கை மாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த குற்றச்சாட்டில் காவல்துறை உயர் அதிகாரிகளின் பங்கு குறித்தும், புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. 

எனவே போக்சோ வழக்கு குறித்தும் வழக்கை இழுத்து மூடியது குறித்தும் பணம் கைமாறியது குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று (செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் சார்பில், இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதை விசாரித்த நீதிபதி, குழந்தைகள் தொடர்புடைய வழக்கில் விளம்பரம் தேட வேண்டாம். சிறப்பு விசாரணை குழு அமைத்து நான்கு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் என்ன செய்துவிட முடியும். தமிழக போலீசார் மீது நம்பிக்கை இல்லையா? சிபிஐக்கு மாற்ற வேண்டுமென கேட்கிறீர்களே. அப்படியானால் சிபிஐ அதிகாரிகள் ஆப்பிரிக்காவில் இருந்தா வரப்போகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து காவல்துறை சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘இந்த வழக்கு தொடர்பான தகவல்கள், ஆதாரங்கள் வைத்திருப்பவர்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கலாம் என்று கூறினார். 

இந்த வழக்கின் நிலை குறித்து நாளை சிறப்பு புலனாய்வு குழு செய்த அறக்கை வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

சிறப்பு குலனாய்வு குழுவில் இடம் பெற்றிருந்த ஐபிஎஸ் அதிகாரி கீதாஞ்சலி தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியதால் அவருக்கு பதிலாக வேறு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

இதைத்தொடர்ந்து நீதிபதி, மனுதாரர் வாராகி தன்னிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆதாரங்களை நாளை பகல் 3:00 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராகி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சிறப்பு புலனாய்வு குழு, வீரமணி வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அக்டோபர்7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share