செயற்கை நுண்ணறிவை குறிக்கும் ‘Artificial Intelligence – AI’ என்ற பெயருக்குப் பதிலாக ‘Super Intelligence – SI’ என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, ‘Super Intelligence சகாப்தத்தை தொடங்கி வைப்பது’ என்ற தலைப்பில் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. நவீன AI தொழில்நுட்பம் அமெரிக்காவில்தான் உருவானது. அமெரிக்க விஞ்ஞானிகள்தான் இந்தத் துறைக்கு பெயரிட்டு, அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தனர்.
‘Artificial Intelligence’ என்ற பெயர் முதன்முதலில் வைக்கப்பட்டபோது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்று இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
இன்றைய AI தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யும் வேலைகளை பின்பற்றுவதோடு மட்டும் நிற்பதில்லை. மனிதர்களின் திறனை மேலும் அதிகரிக்கவும், புதிய விஷயங்களை உருவாக்கவும் உதவுகிறது.

எனவே, இந்தத் தொழில்நுட்பத்தை இனி வெறும் ‘Artificial Intelligence’ என்று அழைப்பதைவிட, அதன் வளர்ச்சி மற்றும் திறனை வெளிப்படுத்தும் வகையில் ‘Super Intelligence’ என்று அழைப்பதே பொருத்தமானது.
அதன்படி, அமெரிக்க அரசின் நிர்வாகப் பிரிவுகளில் சட்டம் அனுமதிக்கும் அளவுக்கு ‘Artificial Intelligence’, ‘AI’ என்பதற்குப் பதிலாக ‘Super Intelligence’, ‘SI’ என்ற பெயர்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
இந்த உத்தரவை பிறப்பித்த அதே நாளில், வெள்ளை மாளிகையில் முன்னணி AI நிறுவனங்களின் தலைவர்களையும் டிரம்ப் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் OpenAI-ன் கிரெக் பிராக்மேன், Anthropic-ன் டாரியோ அமோடி, Meta-வின் மார்க் ஜுக்கர்பெர்க், Google-ன் சுந்தர் பிச்சை, Nvidia-வின் ஜென்சன் ஹுவாங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது AI தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பாக இந்த நிறுவனங்களுடன் வெள்ளை மாளிகை ஒப்பந்தம் செய்துகொண்டது.
அதன்படி, நிறுவனங்கள் உருவாக்கும் AI அமைப்புகள், அவர்கள் திட்டமிட்டபடியே செயல்படுகின்றனவா என்பதை தணிக்கையாளர்கள் மூலம் தாமாகவே ஆய்வு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல, AI அமைப்புகள் அனுமதியின்றி மற்ற நிறுவனங்களின் கணினி மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய டிரம்ப், “இது ஒரு அரசியலமைப்பு போன்றது” என்று கூறினார்.
இதுதவிர, AI தொழில்நுட்பத்தின் பாதுகாப்பை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைப்பது குறித்தும் பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார். அந்தக் குழுவில் யார் இடம்பெறுவார்கள் என்பதை அவர் கூறவில்லை.
AI தொடர்பான வெள்ளை மாளிகையின் கொள்கைகளை கவனிப்பதற்காக புதிய அதிகாரி ஒருவரை விரைவில் நியமிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் பேசிய Meta தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், “AI அமைப்புகளுக்கு வலுவான கட்டுப்பாடுகளை உருவாக்க நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன” என்று தெரிவித்தார்.
