கவனம் மக்களே.. 6 மாதமாக ரேஷன் பொருள் வாங்கவில்லையா? அக்டோபர் 1 முதல் புதிய கட்டுப்பாடு!

Published On:

| By Pandeeswari Gurusamy

நாடு முழுவதும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் ரேஷன் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநில அரசுகளின் பொது விநியோகத் திட்டப் (ரேஷன்) மூலம் இலவச மற்றும் மானிய விலையிலான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதன் மூலம் 80.6 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த சூழலில் போலி பதிவுகளைத் தவிர்க்கவும், தகுதியான நபர்களுக்கு மட்டுமே சலுகைகள் சென்றடைவதையும் உறுதி செய்ய ரேஷன் கார்டு தரவுகள் அவ்வப்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர் இறந்த பிறகும் பெயர் நீக்கப்படாமல் இருப்பது, வேறு இடத்திற்கு குடிபெயர்ந்த பின்பும் பழைய முகவரியில் பதிவு தொடர்வது மற்றும் ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளில் இடம்பெற்றிருப்பது போன்ற தவறுகளைக் கண்டறிந்து நீக்கும் நடவடிக்கைகளில் மத்திய உணவுத் துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

ADVERTISEMENT

1.58 கோடி பயனாளிகளுக்குத் தற்காலிக தடை:

அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காத 1.58 கோடி பயனாளிகளின் சலுகைகளை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தற்காலிகமாக முடக்க மத்திய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ரேஷன் கார்டுகள் உடனடியாக ரத்து செய்யப்படாது; அவர்களின் பெயர்களும் தரவுத்தளத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படாது. சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களின் தகுதியை உறுதி செய்ய 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

e-KYC கட்டாயம்:

இந்த அவகாசத்திற்குள் பயனாளிகள் தங்களது மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு (e-KYC) நடைமுறையில் தங்கள் தகுதியை உறுதி செய்யலாம். தேவைப்படும் இடங்களில் அதிகாரிகளை வைத்து கள ஆய்வும் நடத்தப்படும். இதன் மூலம் தகுதி உறுதி செய்யப்பட்டால், முடக்கப்பட்ட ரேஷன் கார்டுகள் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வழக்கம்போல் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

தமிழக அரசு நடவடிக்கை:

தமிழகத்தைப் பொறுத்தவரை, அக்டோபர் 1 முதல் தற்காலிகமாக முடக்கப்படும் ரேஷன் கார்டுதாரர்கள், அடுத்த 3 மாதங்களுக்குள் e-KYC மற்றும் தேவையான கள ஆய்வுகள் மூலம் தங்களது தகுதியை உறுதிசெய்தால், கார்டுகள் உடனடியாக மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, கணினிமயமாக்கல், ஆதார் இணைப்பு மற்றும் தரவு சரிபார்ப்பு நடவடிக்கைகள் மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை சுமார் 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை தெரிவித்துள்ளது.

அதேபோல், கடந்த ஜூலை 30-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளுக்கான e-KYC பணிகள் 90.64 சதவீதம் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் விவகாரத்தில் தகுதியான குடும்ப அட்டை தாரர்களை பாதிக்காதவகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share