வங்கி ஸ்டிரைக் ஒத்திவைப்பு: AIBOC பொதுச் செயலாளர் ரூபம் ராய் பதவி விலக UCO வங்கி அதிகாரிகள் போர்க்கொடி!

Published On:

| By Mathi

Bank Strike-UCO Bank

3 நாள் வங்கி வேலைநிறுத்தம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட விவகாரத்தில் வங்கி அதிகாரிகள் சங்கங்களுக்குள் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (AIBOC – All India Bank Officers’ Confederation) பொதுச் செயலாளர் ரூபம் ராய் பதவி விலக வேண்டும் என்று UCO வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மேற்கு வங்கப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

5 நாள் வங்கிப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான UFBU முடிவு செய்திருந்தது. ஆனால் செப்டம்பர் 27 இரவு இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த முடிவுக்கு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் பலர் தங்களது சங்கங்களில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்த நிலையில், பல்வேறு சங்கங்களும் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்ட விதம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில், UCO வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மேற்கு வங்கப் பிரிவு பொதுச் செயலாளர் தீப் பிரகாஷ் ராவத் செப்டம்பர் 29-ஆம் தேதி அகில இந்திய UCO வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

அதில், ”3 நாள் வேலைநிறுத்தம் திடீரென ஒத்திவைக்கப்பட்டு 36 மணி நேரத்துக்கு மேலாகியும், அதற்கான காரணத்தை உறுப்பினர்களுக்கு விளக்க AIBOC தலைமையிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திலும், AIBOC பொதுச் செயலாளர் ரூபம் ராய் எடுத்த முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன. செப்டம்பர் 27 இரவு நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை குறித்து பல்வேறு சங்கங்களின் மூத்த தலைவர்களுக்குக்கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

வேலைநிறுத்தத்துக்காக அதிகாரிகள் தயாராகி வந்த நிலையில், கடைசி நேரத்தில் அதை ஒத்திவைத்தது உறுப்பினர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். இதனால் AIBOC பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ரூபம் ராய் விலக வேண்டும்.

வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக கடைசி நேரம் வரை உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததற்கு AIBOC பொறுப்பேற்க வேண்டும். AIBOC-ல் இருந்து தங்களது அமைப்பு உடனடியாக விலகுகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share