ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது மூன்றாவது பதக்கமாக தங்கம் வென்று அசத்திய தமிழக வீராங்கனை வித்யா ராமராஜுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய் இன்று செப்டம்பர் 29-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பு: ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் பெண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அவரது மகத்தான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் பெறும் மூன்றாவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனது திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
