ஸ்டிரைக் ஒத்திவைப்புக்கு தொடரும் எதிர்ப்பு: அடுத்தகட்ட போராட்டத்துக்கு கனரா வங்கி அதிகாரிகள் அழைப்பு!

Published On:

| By Mathi

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டாலும் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

5 நாள் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் 3 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான UFBU முடிவு செய்திருந்தது. இதற்காக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தயாராகி வந்த நிலையில், செப்டம்பர் 27 இரவு இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு வேலைநிறுத்தம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே இந்தியன் வங்கியைச் சேர்ந்த 17 அதிகாரிகளும், பஞ்சாப் நேஷனல் வங்கியைச் சேர்ந்த 75 அதிகாரிகளும் தங்களது சங்கங்களில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது கனரா வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பும் (CBOF) அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் (INBOC) மூலம் UFBU-விடம் கோரிக்கையை எடுத்துச் செல்ல வேண்டும் என்று CBOF தெரிவித்துள்ளது.

5 நாள் வங்கிப் பணியை அமல்படுத்துவதுதான் முதன்மையான கோரிக்கை என்று தெரிவித்துள்ள CBOF, அதனுடன் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் வங்கி அதிகாரிகளின் மற்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுவிட்டதால் போராட்டத்தையே கைவிடக்கூடாது என்றும் கூறியுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், வங்கி அதிகாரிகள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணி நேரத்தில் மட்டும் பணியாற்ற வேண்டும். பணி நேரம் முடிந்த பிறகு கூடுதலாக வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், வங்கிப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுக்களில் இருந்தும் வெளியேற வேண்டும் என்றும் கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share