கோவையில் குட்கா பொருட்களை கடத்திச் சென்றவர்கள் காரில் தப்பிச் செல்ல முயன்றபோது, உயிரை பொருட்படுத்தாமல் காரின் மேற்கூரையில் ஏறி சென்று கொள்ளையர்களை கைது செய்த தலைமைக் காவலர் வேல்முருகனை முதல்வர் விஜய் பாராட்டினார்.
கோவையில் கடந்த 27ம் தேதி கோவில்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் வேல்முருகன்(456), குட்கா பொருட்களை கடத்திச் சென்றவர்கள் காரில் தப்பிச் செல்ல முயன்றபோது, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தப்பிச் சென்ற காரின் மேற்கூரையில் ஏறி, குற்றவாளிகள் தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் சுமார் 40 கி.மீ. தூரம் மிகுந்த துணிச்சலுடன் பயணித்தார்.
தொடர்ந்து காவல்துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால், மேற்படி வாகனம் அவிநாசி அருகே தடுத்து நிறுத்தப்பட்டது. இதில் தொடர்புடைய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 233 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது
தலைமைக் காவலர் வேல்முருகனின்(HC 456) சிறப்பான துணிச்சல், சமயோசிதம் மற்றும் கடமை உணர்வைப் பாராட்டி, தமிழக முதல்வர் விஜய் நேரில் அழைத்து, அவரது வீரதீர செயலுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
மேலும்,தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்களும் தலைமைக் காவலர் வேல்முருகனை நேரில் பாராட்டி, அவரது சிறப்பான துணிச்சல் மற்றும் கடமை உணர்விற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
