சமூக வலைதளங்களை 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பயன்படுத்த தடை விதிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகளில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் Facebook, Instagram உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தக் கோரி, அரசு சாரா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (செப்டம்பர் 28) விசாரணைக்கு வந்தது.
இந்திய ஒப்பந்த சட்டத்தின்படி 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாது. ஆனால் சமூக வலைதளங்களில் அக்கவுண்ட்ஸ் தொடங்கும்போது அந்த நிறுவனங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்பதாக ‘Agree’ ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக நீதிபதி ஜாய்மால்ய பாக்சி கூறுகையில், ”சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் தொடங்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக இருக்க வேண்டும்” என்றார். மேலும், “இதை சட்டபூர்வமான விதியாக கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்” என்றும் நீதிபதி ஜாய்மால்ய பாக்சி கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் தனியாக சமூக வலைதள கணக்குகளை தொடங்குவதைத் தடுக்கும் பொறுப்பை தொடர்புடைய நிறுவனங்களுக்கு விதிக்கும் வகையில், விதிமுறைகள் சேர்க்கப்படும்” என்றார்.
அதேநேரத்தில், ”கல்வி சார்ந்த இணையதளங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றுக்கு பெற்றோரின் ஒப்புதலுடன் சிறுவர்களுக்கு அனுமதி வழங்கலாம்” என்றார்.
இந்த விசாரணையின் முடிவில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்குவது தொடர்பாக மத்திய அரசு எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
