தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு பகுதிகளைச் சேர்ந்த 98 மலை கிராம மக்கள் தொடர்ந்து 4-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 29) விசாரணைக்கு வருகிறது.
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, மேகமலை, தும்மகுண்டு, சிங்கராஜபுரம், நரியூத்து, பொன்னம்படுகை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதிகள் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக எல்லைக்குள் வருவதாகக் கூறி, பட்டா இல்லாமல் வசிக்கும் குடும்பங்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலை கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் இரவு பகலாக போராட்ட இடத்திலேயே தங்கி வருகின்றனர். அவர்களுக்கு அங்கே உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் காரணமாக கடமலைக்குண்டு பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
இதற்கிடையே மலை கிராம மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மேகமலை விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மலைக்கிராம மக்கள், தங்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும், சாதகமான முடிவு கிடைக்காவிட்டால் காத்திருப்புப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
