H-1B விசா: இந்தியர்களுக்கு மீண்டும் நெருக்கடி… அமெரிக்காவின் புதிய எச்சரிக்கை!

Published On:

| By Mathi

US-H-1B Visa- JD Vance

ஆயிரக்கணக்கான அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, H-1B விசா மூலம் வெளிநாட்டினரை நியமிக்கும் அமெரிக்க ஐடி நிறுவனங்களுக்கு, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

H-1B விசா என்பது வெளிநாட்டினரை, அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்கள் அங்கு பணிபுரிவதற்காக அழைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது. 1990-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சியில் இந்த விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

2024-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட H-1B விசா விண்ணப்பங்களில் 71 சதவிகிதம், அதாவது சுமார் 2.83 லட்சம் விண்ணப்பங்கள் இந்தியர்களுடையவை. 2-வது இடத்தில் சீனர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் H-1B விசா நடைமுறையை டிரம்ப் அரசு கடுமையாக்கியுள்ளது. அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த அல்லது பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள நிறுவனங்கள், H-1B விசா மூலம் வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்க விண்ணப்பித்தால், அந்த நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்ய அமெரிக்க அரசுத் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், வெளிநாட்டில் இருந்து H-1B விசாவில் ஊழியர்களை அழைத்து வருவதற்கான விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் செலுத்தும் நடைமுறையும் தொடர்கிறது. இந்தக் கட்டுப்பாடு 2027-ஆம் ஆண்டு செப்டம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

H-1B விசா பெறுபவர்களில் இந்தியர்களே பெரும்பான்மையாக இருப்பதால், இந்தக் கட்டுப்பாடுகள் இந்தியர்களுக்கு பாதகமானதாகப் பார்க்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்தப் பின்னணியில் H-1B விசா குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியிருப்பதாவது: H-1B விசா நடைமுறையில் உள்ள மோசடிகள் குறித்து ஆய்வு செய்தோம். இந்த முறையை மாற்றுவதற்கான சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றும் சூழல் தற்போது இல்லை.

ஒரு தொழில்நுட்ப நிறுவனம் H-1B விசா மூலம் ஒருவரை வேலைக்கு எடுக்கிறது என்றால், அவர் உண்மையிலேயே மிகச் சிறந்த திறமை கொண்டவராக இருக்க வேண்டும். அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறைக்கோ, பொருளாதாரத்திற்கோ குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கக்கூடியவராக இருக்க வேண்டும்.

ஆண்டுக்கு 60 ஆயிரம் டாலர் சம்பளம் வாங்கும் அமெரிக்கரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக 45 ஆயிரம் டாலர் சம்பளத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்படவில்லை.

அதனால்தான் 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தோம். H-1B விசாவைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதைத் தடுப்பதற்கான வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம்.

ஒரு நிறுவனம் H-1B விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, ‘எங்களுக்கு ஊழியர்கள் மிகவும் அவசரமாகத் தேவைப்படுகிறார்கள்; தேவையான ஊழியர்கள் கிடைக்கவில்லை’ என்று கூறுகிறது. ஆனால் அந்த நிறுவனத்தின் முந்தைய நடவடிக்கைகளைப் பார்த்தால், 5,000 ஊழியர்களை அது பணிநீக்கம் செய்திருக்கும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

நீங்கள் அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கிறீர்கள் என்றால், அவர்களுக்குப் பதிலாக வெளிநாட்டு ஊழியர்களைத் தேடிச் செல்லக்கூடாது.

குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டு வந்து அமெரிக்க ஊழியர்களுக்குப் பதிலாக நியமிப்பதற்காக H-1B விசா திட்டம் இருக்கக்கூடாது. அமெரிக்கப் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்காகவே அது இருக்க வேண்டும். அதை உறுதி செய்வதற்காகத்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு ஜே.டி.வான்ஸ் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share