நாடு முழுவதும் நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைத்ததற்கு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (UFBU) புனே பிரிவு கூறியுள்ளதாவது: மிகுந்த வேதனை, கோபம் மற்றும் துரோகம் செய்யப்பட்டதாக உணருகிற மனநிலையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறோம். ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு, பல்வேறு தியாகங்களை செய்த பிறகு, கடைசி நேரத்தில் செப்டம்பர் 28 முதல் நடைபெற இருந்த 3 நாள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக எடுக்கப்பட்ட முடிவு என்பது எங்களுக்கு மிகக் கடுமையான ஏமாற்றத்தைத் தருகிறது. இதற்கு புனே அமைப்பு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.

எந்த ஒரு காலக்கெடு, எழுத்துப்பூர்வமான உறுதிமொழி எதுவுமே இல்லாமல் ஒரு உயர்நிலை குழு அமைக்கப்படுகிறது என்பதற்காக அறிவிக்கப்பட்ட 3 நாள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்கவே முடியாது.
வங்கி ஊழியர்களுக்கு தேவை 5 நாள் வங்கிப் பணியும், நீண்டகால பிரச்சினைகளுக்கான தீர்வும்தான்; உயர்நிலைக் குழுக்கள் அல்ல.

2026-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி 9.30 மணிக்கு நடைபெற்ற வங்கிகள் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் என்னதான் நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.
5 நாள் வேலை தொடர்பாக ஆய்வு செய்யும் உயர்நிலைக் குழுவுக்கு நவம்பர் 30-ம் தேதியை காலக்கெடுவாக அறிவிக்க வேண்டும். அதற்கு முன்னர் அக்டோபர் 15-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியைப் பெற வேண்டும். இவ்வாறு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் புனே கிளை தெரிவித்துள்ளது.
