வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் ‘ஒத்திவைப்பு’ மட்டும்தான்… ‘வாபஸ்’ இல்லை – ஏன்?

Published On:

| By Mathi

Bank Strike Deferred: What Happens Next?

வங்கி ஊழியர்களின் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் வேலைநிறுத்தம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களது கோரிக்கைகளை கைவிடவில்லை என்றும், பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையிலேயே போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாகவும் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான UFBU விளக்கம் அளித்துள்ளது.

இந்திய வங்கிகள் சங்கமான IBA மற்றும் UFBU நிர்வாகிகள் இடையே செப்டம்பர் 27 இரவு 9.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 5 நாள் வங்கி வேலை முறை, செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (PLI) மற்றும் 2024 மார்ச் 8 ஒப்பந்தத்தில் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து 3 நாள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்ட நடவடிக்கைகளை ஒத்திவைக்க UFBU முடிவு செய்தது.

வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு மட்டுமே..

இதுதொடர்பாக UFBU வெளியிட்ட விரிவான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. 2024-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி ஒப்பந்தத்தில் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டிருந்தாலும், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

ADVERTISEMENT

தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண IBA-UFBU பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவை உடனடியாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய சனிக்கிழமைகளை விடுமுறையாக அறிவிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இந்தக் குழு ஆராயும்.

வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசித்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

PLI விவகாரத்திலும் பேச்சுவார்த்தை

Scale IV மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கான PLI திட்டம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க IBA-வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

மேலும், முந்தைய ஒப்பந்தத்தில் தீர்க்கப்படாமல் இருக்கும் மற்ற பிரச்சினைகளையும் இருதரப்பும் பேசி விரைவாகத் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நடைமுறை முடிவுகளாக மாறுவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் செயல்படுத்தப்படுவதைத் தொடர்ந்து கண்காணிப்போம். குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து UFBU மறுபரிசீலனை செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share