பி.டி.உஷா கண்முன்னே… 42 ஆண்டு சாதனையை தகர்த்த தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ்!

Published On:

| By Mathi

Vithya Ramraj

இந்திய தடகள ஜாம்பவான் பி.டி.உஷா மைதானத்தில் அமர்ந்து பார்த்து கொண்டிருக்க, அவரது 42 ஆண்டுகால சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் முறியடித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

ADVERTISEMENT

இந்தப் போட்டியில் 400 மீட்டர் தொலைவை 54.75 வினாடிகளில் ஓடி கடந்தார் வித்யா ராமராஜ். இதுவரை இந்திய வீராங்கனை ஒருவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தை இவ்வளவு குறைந்த நேரத்தில் கடந்ததில்லை.

இதற்கு முன்பு பி.டி.உஷா, 400 மீட்டர் தூரத்தை 55.42 வினாடிகளில் ஓடி கடந்ததுதான் இந்திய சாதனையாக இருந்தது. 42 ஆண்டுகளாக நீடித்த அந்தச் சாதனையைத்தான் வித்யா தற்போது முறியடித்துள்ளார்.

ADVERTISEMENT

இத்தனைக்கும் இதை, தற்போதைய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான பி.டி.உஷாவும் மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து நேரில் பார்த்துக்கொண்டிருந்தார். 42 ஆண்டுகளாக யாராலும் முறியடிக்க முடியாத தனது சாதனையை, தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராமராஜ் தனது கண்முன்னே முறியடித்ததை உஷா பார்த்தார்.

யார் இந்த வித்யா ராமராஜ்?

கோவையைச் சேர்ந்த வித்யா ராமராஜ், 1998 செப்டம்பர் 20-ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தை ராமராஜ் லாரி ஓட்டுநராகப் பணியாற்றியவர்; தாய் மீனா குடும்பத் தலைவி. வித்யாவின் இரட்டைச் சகோதரி நித்யா ராமராஜும் தடகள வீராங்கனை.

ADVERTISEMENT

பள்ளிப் பருவத்தில் வித்யாவும் நித்யாவும் முதலில் ஹாக்கியில் ஆர்வம் காட்டினர். பின்னர் ஈரோட்டில் உள்ள விளையாட்டு விடுதியில் சேர்க்கப்பட்ட இருவரும் தடகளத்திற்கு மாறினர். வித்யா ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பிபிஏ படித்தார்.

ஆரம்பத்தில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களில் பங்கேற்ற வித்யா, பின்னர் 400 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆனால் அவரது தடகளப் பயணம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. கொரோனா பாதிப்பு, அறுவை சிகிச்சை, மொழிப் பிரச்சினை என பல்வேறு சவால்களை அவர் எதிர்கொண்டார்.

ஒருகட்டத்தில் தேசிய முகாமை விட்டு வெளியேறிய வித்யா, பயிற்சியாளர் நேபால் சிங் ரத்தோரிடம் தனியாகப் பயிற்சி பெறத் தொடங்கினார். அப்போது பயிற்சி, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளைச் சமாளிப்பதே சிரமமாக இருந்த நிலையில், வருமான வரித்துறையில் பணிபுரியும் அவரது சகோதரி நித்யா பொருளாதார ரீதியாகவும் உதவினார். பின்னர் வித்யாவுக்கு இந்திய ரயில்வேயில் வேலை கிடைத்தது.

2023-ஆம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிதான் வித்யாவை இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போது 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகள் பதிவு செய்து, பி.டி.உஷாவின் தேசிய சாதனையை முதலில் சமன் செய்தார்.

அதே ஆசிய விளையாட்டில் ஒரு வெண்கலம், இரண்டு தொடர் ஓட்ட வெள்ளிப் பதக்கங்கள் என மூன்று பதக்கங்களை வென்றார்.

2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிலும் இந்தியாவின் 4×400 மீட்டர் தொடர் ஓட்ட அணியில் இடம்பெற்றார்.

2023-ஆம் ஆண்டு பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்த வித்யா, 3 ஆண்டுகளாக அதனை முறியடிப்பதற்காக காத்திருந்தார். அந்தக் காத்திருப்புதான் தற்போது பி.டி.உஷாவின் கண்முன்னே முடிவுக்கு வந்திருக்கிறது.

பி.டி.உஷா என்ன சொன்னார்?

இது குறித்து தற்போது பி.டி.உஷா கூறுகையில், “சாதனைகள் என்பவை முறியடிப்பதற்காகத்தான். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் என்னுடைய நீண்டகால சாதனையை வித்யா ராமராஜ் முறியடித்தது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். பல ஆண்டுகளாக நீடித்த ஒரு சாதனையை அடுத்த தலைமுறை வீராங்கனை முறியடிப்பது அந்த வீராங்கனைக்கு மட்டுமல்ல, அந்த விளையாட்டுக்கே பெருமையான தருணம்” என்றார்.

சாதனையைப் பற்றி வித்யா

போட்டிக்குப் பிறகு வித்யா கூறுகையில், “2023-ல் பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்த பிறகு, ‘எப்போது அதை முறியடிப்பீர்கள்? எப்போது 55 வினாடிகளுக்குள் ஓடுவீர்கள்?’ என்று எல்லோரும் என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இன்று 54 வினாடிகளில் ஓடியிருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

மேலும், “எனக்கு இப்போது 28 வயதாகிறது. அடுத்த தலைமுறையினருக்கு நான் சொல்வது ஒன்றுதான். வயதைப் பார்க்காதீர்கள். நான் 54 வினாடிகளில் ஓடியிருக்கிறேன்; உங்களால் 53 வினாடிகளிலும் ஓட முடியும்” என்றார் வித்யா ராமராஜ்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share