லஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞராக வருபவர்கள் எப்படி சட்டத்தை பாதுகாப்பார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்கள், நியமனத்துக்கு லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இது தொடர்பாக கன்னியாகுமரி சேர்ந்த ஜெகன் ராஜ் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களுக்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவட்ட பொறுப்பில் இருந்த அனீஸ், பெண் வழக்கறிஞரிடம் பணம் கேட்டு பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் ஒரு வழக்கறிஞர் நியமனத்துக்கு 15 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும் பெண்ணாக இருப்பதால் 2 லட்சம் ரூபாய் கொடுத்து 13 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் பேரம் பேசப்படுகிறது. இதுபோன்று அகஸ்டின் என்ற வழக்கறிஞரிடமும் பேரம் பேசப்பட்டுள்ளது.
இந்த அகஸ்டின் தற்போது அரசு வழக்கறிஞராக இருக்கிறார். இந்த ஆடியோ விவகாரம் வெளியானதை தொடர்ந்து அனீஸ் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
எனவே இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி முருகன் முன்பு இன்று (செப்டம்பர் 29) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஹரீத் சபரி ஆஜராகி, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் பெற்றதற்கான ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வாதங்களை முன் வத்தார்.
அரசு சார்பில் வாதங்களை முன்வைக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.
அப்போது அரசு வழக்கறிஞர்கள் பதவியை யார் விற்பனை செய்வது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி முருகன், வழக்கறிஞர்கள் பதவிக்கு லஞ்சம் பெறப்படுகிறது என்று புகார் அளித்தும் ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவில்லை. லஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என்பதால் இருதரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
லஞ்சம் கொடுத்து அரசு வழக்கறிஞர்களாக வருபவர்கள் நாட்டை காப்பாற்றுவார்களா? அல்லது சட்டத்தை தான் பாதுகாப்பார்களா?
இந்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
