பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்த வித்யா ராம்ராஜ்.. மகிழ்ச்சியில் பெற்றோர்

Published On:

| By Pandeeswari Gurusamy

பி.டி. உஷாவின் சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பின்புத் தங்கள் மகள் முறியடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக வித்யா ராம்ராஜின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

ADVERTISEMENT

இந்தப் போட்டியில் 400 மீட்டர் தொலைவை அவர் 55.68 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார். முன்னதாகத் தகுதிச் சுற்றில், 400 மீட்டர் தூரத்தை 55.42 வினாடிகளில் கடந்து பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசியச் சாதனையைச் முறியடித்துள்ளார். நாடே வித்யா ராம்ராஜின் சாதனையைக் கொண்டாடி வரும் நிலையில், கோவையின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர், மகளின் வெற்றியைத் தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

வித்யா ராம்ராஜின் குடும்ப பின்னணி:

கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த வழுக்குப்பாறை மீனாட்சிபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராம்ராஜ் – மீனா தம்பதியர். இவர்களுக்குச் சத்யா, வித்யா, நித்யா என மூன்று மகள்கள். இரட்டையர்களான வித்யாவும் நித்யாவும் பள்ளிப் பருவத்திலிருந்தே விளையாட்டுப் போட்டிகளில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று வந்துள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் வித்யா ரயில்வே துறையிலும், நித்யா வருமான வரித்துறையிலும் பணியாற்றி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 42 ஆண்டுகளாக நீடித்த பி.டி. உஷாவின் சாதனையைத் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் அவரது கண்முன்னே முறியடித்துள்ளார். வித்யா ராம்ராஜின் இந்தச் சாதனையைப் பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்னம்பலம் தரப்பில் தொடர்புகொண்டு பேசியபோது வித்யா ராம்ராஜின் தாயார் மீனா, “40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பி.டி. உஷாவின் சாதனையை எனது மகள் முறியடித்திருப்பது பெருமையாக இருக்கிறது. பி.டி. உஷாவின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற தீவிர ஆர்வத்துடன் என் மகள் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தாள். பி.டி.உஷா இதுவரை தனது மகளுக்கு ரெஸ்பான்ஸ் கொடுத்தது இல்லை. இப்போது பிடி உஷாவின் சாதனையை நிறைவு செய்து இருக்கின்றனர்.

ADVERTISEMENT

பெண் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களது இந்தச் சாதனை எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. நாங்கள் இதுவரை பட்டாசு வெடித்ததே கிடையாது; ஆனால் நேற்று பட்டாசு வெடித்துக் கொண்டாடினோம்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவரது தந்தை ராம்ராஜிடம் பேசியபோது, “இந்தப் போட்டியில் எங்கள் மகள் தங்கம் வென்றிருந்தால் நேரடியாக ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றிருக்க முடியும். இருப்பினும், பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்ததே தங்கம் வென்றது போல் மகிழ்ச்சியாக இருந்தது. ஒன்றிரண்டு ஆண்டுகள் இல்லை, 40 ஆண்டுகளுக்கும் மேலாக முறியடிக்க முடியாத சாதனை அது. இப்போது எங்கள் மகள் அந்த சாதனையை முறியடித்திருப்பது பெருமையாக உள்ளது. மகள்கள் இப்போது நல்ல நிலையில் இருக்கின்றனர். மகளின் பயிற்சிக்குத் தொடர்ந்து அரசு உதவிகளைச் செய்ய வேண்டும்.

முன்பு நாங்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த காலம் மாறி, இப்போது அவர்கள் எங்களைப் பார்த்து கொள்கின்றனர். ஓட்டுநராக வேலை பார்த்து வந்த என்னை, இப்போது வேலைக்குச் செல்ல வேண்டாம் என மகள்கள் கூறிவிட்டனர். அதனால் இப்போது வீட்டிலிருந்தபடியே ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருக்கிறேன். என் மகள் மேலும் பல சிகரங்களைத் தொட வேண்டும்” என்று தனது ஆசை. ” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share