தமிழ்நாட்டின் மேகமலை வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 29) தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை, வருசநாடு, கண்டமனூர், சின்னமனூர் வனச்சரகங்களில் உள்ள வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த விவரங்களின்படி, இந்த நான்கு வனச்சரகங்களிலும் மொத்தம் 4,601 பேர், 5,072.653 ஹெக்டேர் வன நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக வருசநாடு வனச்சரகத்தில் 2,523 பேர், 3,758.481 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி வனப்பகுதிகளை மீட்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வனத்துறைக்கு உதவ சிறப்பு காவல் குழுவை அமைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவும் மேகமலை பகுதியில் ஆய்வு நடத்தியது. வன நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் போதிய முன்னேற்றம் இல்லை என்று அந்தக் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
இதையடுத்து மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் தமிழக அரசுக்கு கடந்த மே 29-ஆம் தேதி உத்தரவில் அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம்.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கும் நடவடிக்கையைத் தொடங்கியது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் என 118 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் இவர்களுக்கு எதிராக பணியாளர் நடத்தை விதிகள் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க மே 29-ம் தேதி உத்தரவில் கூறியிருந்தது.
இந்த நடவடிக்கைகளால் மேகமலை, வருசநாடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் மக்கள் தாங்களும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதையடுத்து 98 மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதி வெளியேற்றக் கூடாது என்றும், தங்களது நிலம் மற்றும் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 5,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், செப்டம்பர் 26 முதல் கடமலைக்குண்டு பேருந்து நிலையம் அருகே மலை கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். போராட்டத்துக்கு வர்த்தகர்களும் ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தின்போது முதியவர்கள் சிலர் மயங்கி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தப் பின்னணியில் மேகமலை வனப்பகுதி ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேகமலை வனப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டனவா, இதுவரை தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக, வனப்பகுதிகளை அழித்து இலவம்பஞ்சு உள்ளிட்ட தோட்டங்களை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க வனப்பகுதிகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்தது.
தமிழக அரசு தரப்பில், அங்கு நீண்ட காலமாக வசிப்பவர்கள், பட்டா வைத்திருப்பவர்கள், உண்மையான ஆக்கிரமிப்பாளர்கள் ஆகியோரை தனித்தனியாகப் பார்க்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், மேகமலை வனப்பகுதி ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
