ஸ்டிரைக் ஒத்திவைப்பால் வெடித்த எதிர்ப்பு: மவுனம் கலைத்த வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு!

Published On:

| By Mathi

Bank Strike-UFBU

3 நாள் வங்கி வேலைநிறுத்தம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான UFBU விளக்கம் அளித்துள்ளது.

5 நாள் வங்கிப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த UFBU முடிவு செய்திருந்தது. ஆனால் செப்டம்பர் 27 இரவு இந்திய வங்கிகள் சங்கத்துடன் (IBA) நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. வேலைநிறுத்தத்தை ஏன் கடைசி நேரத்தில் ஒத்திவைத்தீர்கள் என்று பல்வேறு சங்கங்களும் UFBU தலைமையிடம் கேள்வி எழுப்பின.

இந்த நிலையில், செப்டம்பர் 29-ஆம் தேதி UFBU வெளியிட்டுள்ள அறிக்கையில், ”செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து, 5 நாள் வங்கிப் பணி உள்ளிட்ட கோரிக்கைகள் அடுத்தகட்டத்துக்கு சென்றுள்ளன. 5 நாள் வங்கிப் பணி தொடர்பாக 2024 மார்ச் 8-ஆம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தில் இருந்த திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

5 நாள் வங்கிப் பணியை அமல்படுத்துவது தொடர்பாக உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று (செப்டம்பர் 30) நடைபெறுகிறது. இந்த குழு அமைக்கப்பட்டதே இறுதி வெற்றி அல்ல. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான ஒரு வழிமுறை மட்டுமே இது. உறுதியான முடிவை எட்டுவதற்கு குழுவுக்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்படும். நமது கோரிக்கை 5 நாள் வங்கிப் பணிதான்.

இந்த கோரிக்கையில் எந்தத் தளர்வும் இல்லை. 5 நாள் வங்கிப் பணி நடைமுறைக்கு வரும் வரை தொடர்ந்து வலியுறுத்துவோம். பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைப் பார்த்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம்.

ADVERTISEMENT

வேலைநிறுத்தத்தின் மீது உறுப்பினர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். எனவே அது ஒத்திவைக்கப்பட்டதால் உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் ஏமாற்றம் அடைந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share