‘காடுகளில்தான் தீபாவளி’ முதுமலை வீடியோ குறித்து அமைச்சர் விளக்கம்

By Pandeeswari Gurusamy

|

Published on 17 Nov 2026, 3:59 PM

முதுமலை வனப்பகுதியில் சமீபத்தில் பயணித்த ரீல்ஸ் வீடியோவை அமைச்சர் வன்னி அரசு தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதற்குப் பல தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் அமைச்சர் வன்னி அரசு வனப்பகுதிக்கு சென்றது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் வெளியிட்ட பதிவில், ”முதுமலை காடுகளுக்கு நான் புதிதாக ஒன்றும் போகவில்லை; பொதுவாக வனங்களுக்கு நான் புதிதாகப் போகவில்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக என் கால் படாத காடுகளே இல்லை. அமைச்சரான பிறகு நான் போகவில்லை; கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக காடு, மேடுகள் எல்லாம் சுற்றிய கால்கள் தான் இந்தக் கால்கள்.

நான் காடுகளுக்கு ஏன் அதிகமாகப் போகிறேன் என்றால், குறிப்பாக ட்ரெக்கிங் (Trekking) எனக்கு மிகவும் பிடித்தமானது. ஏறக்குறைய எல்லா காடுகளுக்கும் போயுள்ளேன். தருமபுரியில் வத்தல்மலை என்று ஒன்று உள்ளது; அங்கெல்லாம் யாரும் போகவே முடியாது. சேலம் மேட்டூர் பக்கம் கத்தரிமலை என்று ஒரு மலை உள்ளது; நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பே அந்த மலைக்குப் போயுள்ளேன். நான் இயற்கையோடு இணைந்து வாழக்கூடிய ஒரு வாழ்க்கையை மேற்கொண்டிருப்பவன். எந்த தீபாவளிக்கும் நான் வீடுகளிலோ, சென்னையிலோ இருப்பதில்லை; காடுகளுக்குத்தான் போய்விடுவேன்.

ADVERTISEMENT

நான் மக்களை மட்டும் நேசிப்பவன் மட்டும் அல்ல, விலங்குகளையும் நேசிப்பவன்; செல்லப்பிராணிகளை வளர்ப்பவன். அதனால் எந்த விலங்குகளுக்கும் என்னால் தீங்கு ஏற்படும் என்று சொல்ல முடியாது. நான் விலங்குகளை, மனிதர்களை, காடுகளை, கடலை நேசிப்பவன். எல்லோரும் ஒரு ஓய்வுக்காக சினிமா, ரிசார்ட் என்று போவார்கள். ஆனால் நான் காடுகளுக்கும் கடல்களுக்கும் தான் பயணம் செய்திருக்கிறேன்.

நான் எல்லாவற்றிற்கும் அனுமதி வாங்கித்தான் சென்றுள்ளேன். அனுமதி இல்லாமல் நாம் போக முடியாது. கடந்த காலங்களில் எனது முயற்சியில்தான் ‘டி.என். ட்ரெக்கிங்’ (TN Trekking) உருவானது. நான் போகும் இடங்களில் எல்லாம் டி.என். ட்ரெக்கிங்கில் பணிபுரியும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த உறவுகள், ‘எங்களை நிரந்தரப்படுத்த வேண்டும்’ என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்கள். அந்தக் கோரிக்கையை அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடமும் கொடுத்துள்ளேன்” என்று தன் மீதான விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel