உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இ-மெயில் சேவை முடங்கியதால், வங்கிகள், பங்குச்சந்தை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இ-மெயில் மூலம் தகவல்களைப் பரிமாற முடியாத நிலையில், சில நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஃபேக்ஸ் முறைக்கு மீண்டும் திரும்பியுள்ளன. தொலைபேசி, புளூடூத் போன்ற மாற்று வழிகளையும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Outlook, Teams, Copilot உள்ளிட்ட சேவைகளில் நவம்பர் 13-ந் தேதி உலகம் முழுவதும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் வங்கிகள், நிதி நிறுவனங்கள், பங்குச்சந்தைகள், கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள முடியாததால், சில நாடுகளில் வர்த்தக நடவடிக்கைகள் தாமதமாகின.
தைவானில் மீண்டும் ஃபேக்ஸ்
தைவானில் பங்குச்சந்தை நிறுவனங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் நிதி நிர்வாகப் பணிகள் மைக்ரோசாப்ட் முடக்கத்தால் பாதிக்கப்பட்டன. பொதுவாகப் பங்குகள், குறுகிய காலக் கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது, விற்பது தொடர்பான பரிவர்த்தனைகள் இ-மெயில் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன. ஆனால் இ-மெயில் சேவை செயல்படாததால், தைவானில் உள்ள ஒரு நிதி நிறுவனம் தனது வர்த்தகப் பரிவர்த்தனைகளை ஃபேக்ஸ் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
தைவானில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் தங்களது வெளிநாட்டுத் தலைமையகங்களுக்குத் தகவல்களை அனுப்ப மைக்ரோசாப்ட் இ-மெயில் சேவையைப் பயன்படுத்தி வந்ததே இதற்குக் காரணம். ஜப்பானிலும் சில நிதி நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஃபேக்ஸ் முறையைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபேக்ஸ் என்றால் என்ன? எப்படி இயங்கும்?
இன்றைய தலைமுறையினருக்கு ஃபேக்ஸ் (Fax) என்பது அதிகம் அறிமுகமில்லாத தொழில்நுட்பமாக இருக்கலாம். இ-மெயில், வாட்ஸ்அப் போன்ற வசதிகள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, ஓர் அலுவலகத்தில் இருக்கும் கடிதம், ஒப்பந்தம், கையொப்பமிட்ட ஆவணம் போன்றவற்றை மற்றொரு அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்ப ஃபேக்ஸ் பயன்படுத்தப்பட்டது. ஃபேக்ஸ் மெஷினில் ஆவணத்தை வைத்துத் தொலைபேசி இணைப்பு மூலம் அனுப்பினால், மறுமுனையில் உள்ள ஃபேக்ஸ் மெஷினில் அதன் நகல் அச்சிடப்படும். ஒரு காலத்தில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், செய்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக ஃபேக்ஸ் இருந்தது. 1980- 1990 தமிழ் சினிமாக்களில் இந்த ஃபேக்ஸ் மெஷின்கள் முக்கிய இடம் பிடித்திருக்கும்.
இ-மெயில் பயன்பாடு அதிகரித்த பிறகு ஃபேக்ஸ் பயன்பாடு வெகுவாகக் குறைந்தாலும், சில துறைகளில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மைக்ரோசாப்ட் சேவை முடக்கம் காரணமாக மீண்டும் இந்தப் பழைய தொழில்நுட்பம் கவனம் பெற்றுள்ளது.
பங்குச்சந்தை நிறுவனங்கள் தொலைபேசிக்கு மாறின
பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல், நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பங்குச்சந்தைகளை நடத்தும் யூரோநெக்ஸ்ட் (Euronext) நிறுவனமும் இ-மெயில் சேவை முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அவசரத் தகவல்களை இ-மெயிலில் அனுப்புவதற்குப் பதிலாகத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டன. தொலைபேசியில் தொடர்புகொள்பவர்களின் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வர்த்தகத் தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரிலும் பங்குச்சந்தை வர்த்தகர்கள் தொலைபேசி மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. சில வங்கிகளால் நிதி ஒப்பந்தங்களை உரிய நேரத்தில் முடிக்க முடியவில்லை.
புளூடூத் மூலம் தகவல் பரிமாற்றம்
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல காப்பீட்டு நிறுவனமான அவிவா (Aviva), மைக்ரோசாப்ட் முடக்கத்தைச் சமாளிக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்தது. நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை தொடர்பான தொலைபேசி உரையாடல்களுக்காக மாற்றுத் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டன. இ-மெயில் செயல்படாததால், பதிவு செய்யப்பட்ட உரையாடல்களை அனுப்புவதற்குப் புளூடூத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்த அளவிலான தொழில்நுட்ப முடக்கம் ஏற்பட்டால் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்பே ஒத்திகை நடத்தப்பட்டதாக அவிவா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அமண்டா பிளாங்க் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி கப்பல் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான மெர்ஸ்க் (Maersk), அவசரத் தேவைகளுக்குத் தங்களைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளுமாறு வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியது.
இதனிடையே, சர்வர்களில் ஏற்பட்ட பிரச்சினையே தொழில்நுட்ப முடக்கத்துக்குக் காரணம் என்று மைக்ரோசாப்ட் விளக்கம் அளித்துள்ளது. திட்டமிட்ட சைபர் தாக்குதல் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.










