4 விசில் அடித்தும் பருப்பு வேகவில்லை :  நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By Kavi

|

Published on 14 Nov 2026, 12:26 PM

குக்கரில் சாதம், பருப்பு சரியாக வேகவில்லை எனப் புகாரளித்த பெண்ணுக்கு ரூ.16,755 இழப்பீடு வழங்க விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், புதிதாக வாங்கிய பிரஷர் குக்கரில் சாதம் மற்றும் பருப்பு சரியாக வேகவில்லை எனக் கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

அதாவது, அந்த பெண் ரூ.1,755 கொடுத்து 4 லிட்டர் கொள்ளளவு கொண்ட  பிரஷர் குக்கரை வாங்கியுள்ளார். குக்கரை வாங்கிய முதல் நாளிலேயே அதில் அரிசி வேக வைத்துள்ளார். 3 முதல் 4 விசில் அடித்த பிறகும் சாதம் முழுமையாக வேகவில்லை.

அடுத்த நாள் பருப்பு சமைத்தபோதும் இதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது .

ADVERTISEMENT

இதுகுறித்து கடை நிர்வாகத்திடம் புகார்  தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர்கள் உரிய முறையில் பதிலளிக்கவில்லை என்றும், நிறுவனத்தின் சர்வீஸ் செண்டருக்குச் செல்லுமாறு கூறியதாகவும் அந்தப் பெண் புகாரில்  குற்றம்சாட்டியுள்ளார்.

வயது மற்றும் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சர்வீஸ் செண்டருக்குச் செல்வது சிரமம் என்பதால், குக்கரை மாற்றித் தருமாறு அவர் கோரியுள்ளார்.

ADVERTISEMENT

ஆனால், கடை நிர்வாகம் குக்கரைப் பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் சென்று சர்வீஸ் பில் வழங்கியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த பெண் நுகர்வோர் நீதிமன்றம் நாடியுள்ளார். 

இந்த புகார் மீதான விசாரணையின் போது கடை நிர்வாகம் மற்றும் விநியோகஸ்தர் தரப்பில், சர்வீஸ் ஊழியர்கள் குக்கரை ஆய்வு செய்தபோது அது சரியாக இயங்குவதாகக் கண்டறிந்ததாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில், உற்பத்திக் குறைபாடுகள் இருந்தால் மட்டுமே உத்தரவாதத்தின் அடிப்படையில் பழுதுபார்க்கப்படும் அல்லது மாற்றித் தரப்படும் என்று விளக்கமளிக்கப்பட்டது. 

இதை விசாரித்த நுகர்வோர் ஆணையம்,  ”கடை, விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகிய மூன்று தரப்பினரும் குக்கருக்கான உத்தரவாத விதிமுறைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை” என்று கூறி, மனுதாரருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது, 

குக்கருக்கான பணத்தைத் திருப்பித் தர ரூ.1,755, சேவைக் குறைபாட்டுக்கான இழப்பீடாக ரூ.12,000, வழக்கு செலவுகளுக்காக ரூ.3,000 என மொத்தம் ரூ.16,755 வழங்குமாறு கூறியுள்ளது. 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel