செஞ்சி சிறுமி வீட்டில் கனிமொழி- விஜய் ஆட்சி மீது கடும் தாக்கு!

By Mathi

|

Published on 14 Nov 2026, 2:39 PM

Kanimozhi DMK

செஞ்சியில் காணாமல் போன 7 வயது சிறுமி ஹேமாவதியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திமுக எம்.பி. கனிமொழி, குழந்தைகளுக்குக் கேக் ஊட்டும் முதல்வர் விஜய், காணாமல் போன சிறுமியின் பெற்றோரைச் சந்திக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். குழந்தைகளுக்குக்கூடப் பாதுகாப்பு அளிக்க முடியாத ஆட்சியை விஜய் நடத்துவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பவானி–வடிவேலு தம்பதியின் 2-ஆவது மகள் ஹேமாவதி (7), அக். 11-ந் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், மறுநாள் அதிகாலை வீட்டிலிருந்து மாயமானார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திய போதும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அக். 21-ந் தேதி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிறுமி காணாமல் போய் 34 நாட்களைக் கடந்தும் எந்தத் தகவலும் கிடைக்காததால் பெற்றோர் வேதனையில் உள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., செஞ்சியில் சிறுமியின் வீட்டுக்கு இன்று (நவம்பர் 14) நேரில் சென்று பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது: 2-ஆம் வகுப்பு படிக்கக்கூடிய சிறுமி ஹேமாவதி, தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாள் காலையிலிருந்து காணவில்லை. அந்தக் குழந்தை காணாமல் போய் இன்றைக்கு கிட்டத்தட்ட 35 நாட்கள் ஆகின்றன. ஆனால், அந்தக் குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கு இந்த அரசாங்கம் உண்மையாகவே எதையும் செய்ததாகத் தெரியவில்லை.

ADVERTISEMENT

குழந்தையைக் காணவில்லை என்று தெரிந்தவுடனேயே பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்கள். 2013-ஆம் ஆண்டு கைலாஷ் சத்யார்த்தி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஒரு குழந்தை காணாமல் போனால் அதை வெறும் ‘மிஸ்ஸிங்’ என்று எப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கூடாது. 24 மணி நேரத்திற்குள் கடத்தல் அல்லது குழந்தைக் கடத்தல் தொடர்பான வழக்காகப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், ஏன் ‘மிஸ்ஸிங்’ என்று பதிவு செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ADVERTISEMENT

கேக் ஊட்டும் விஜய்.. இந்த வீட்டுக்கு ஏன் வரவில்லை?

இந்த அரசு இதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது. குழந்தைகள் நலத்துறையும் காவல்துறையும் முதலமைச்சர் விஜய்யின் நேரடிப் பார்வையில் இருக்கக்கூடிய துறைகள். அவருக்குக் கீழ் வரக்கூடிய துறைகள். இதே குழந்தைகளைப் பார்த்துத்தான் ‘நண்பா, நண்பி’ என்று சொல்லி, அந்தக் குழந்தைகளிடம் கேட்டுத்தான் வாக்கு வாங்கி, குழந்தைகளை வீட்டில் போய் அடம்பிடிக்கச் சொல்லித்தான் வாக்கு வாங்கி இந்தப் பதவியில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

நேற்று குழந்தைகளுக்குக் கேக் ஊட்டிக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர். அதைப்பற்றி வேறு கருத்துகள் இல்லை. ஆனால், கேக் ஊட்டுவதற்குப் போகும் முதலமைச்சர் இந்த வீட்டுக்கு வந்து இந்தப் பெற்றோருக்கு ஒரு வார்த்தை ஆறுதல் சொல்லியிருக்கலாம்.

‘நாங்கள் நிச்சயமாக அந்தக் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுப்போம்’ என்று சொல்லியிருக்கலாம். அவர் வர வேண்டாம். இங்கிருக்கக்கூடிய பொறுப்பு அமைச்சராவது வந்து இந்தக் குடும்பத்தினருக்கு ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லியிருக்கிறாரா?

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மாவட்டச் செயலாளர்

மாவட்டச் செயலாளர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கிறார். நாங்கள் வரும் வழியில் பேனர்களும் கொடிகளும் அந்த அளவுக்கு இருக்கின்றன. அந்த அளவுக்கு அவர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களே தவிர, இந்தக் குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கு எந்தவிதமான சரியான முயற்சிகளையும் செய்யவில்லை.

35 நாட்களாக அந்தக் குழந்தை காணாமல் போயிருக்கிறது. ஆனால், எந்தவிதமான சரியான நடவடிக்கையும் இல்லை. இந்தக் குழந்தை கிடைக்குமா? எங்கே இருக்கிறது? என்ன நடந்திருக்கிறது? என்று பெற்றோருக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் ஒரு சிறிய தகவல்கூடத் தரவில்லை.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

இங்கு மட்டுமல்ல. இவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். கடலூரில் மட்டும் எத்தனையோ குழந்தைகள் ஒரே நாளில் காணாமல் போயிருக்கக்கூடிய மிகப்பெரிய அவலம் நடந்திருக்கிறது. கல்லூரியில் படிக்கும் மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஒரு குழந்தையும் அதன் தாயும் காணாமல் போயிருக்கிறார்கள். இதற்கெல்லாம் இந்த அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல், பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று ஒரு ஆறுதல் வார்த்தை சொல்வதற்குக்கூடத் தைரியம் இல்லாதவர்கள்தான் இந்த ஆட்சியில் இருக்கிறார்கள்.

முதலமைச்சருக்கே பாதுகாப்பு குறித்த அச்சமா?

ஏனென்றால், முதலமைச்சரே தன்னுடைய பாதுகாப்பைப் பற்றிப் பயப்படக்கூடிய அளவுக்கு நேற்று கொளத்தூர் சென்றபோது, அவருடைய ரசிகர் ஒருவர் வந்த உடனேயே அவரே தன்னுடைய ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று பயந்துவிட்டார். அப்படிப்பட்ட ஆட்சியை அவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அலங்கோலமான ஆட்சியில், யாரைக் கேட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்களோ, அந்தக் குழந்தைகளுக்குக்கூட ஒரு பாதுகாப்பு தர முடியாத, தரமில்லாத ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் ஒரு முதலமைச்சர், அவருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் தவறுகள் நடக்கும்போதுகூட வாயைத் திறக்க மாட்டேன் என்றால், இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரை இதுவரைக்கும் தமிழ்நாடு பார்த்ததே கிடையாது. இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கனிமொழி அளித்த பதில்கள்:

கேள்வி: இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று திமுக வலியுறுத்திய பிறகுதான் அரசு சிபிசிஐடிக்கு மாற்றியிருக்கிறது. தொடர்ந்து எதுவாக இருந்தாலும் திமுக சொன்னால்தான் இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா?

பதில்: அதற்கு நேரடியாகவே திமுகவே ஆட்சியில் இருக்கலாமே! நாங்கள் சொல்லிச் சொல்லிக் கொடுத்து நீங்கள் ஆட்சி நடத்துவதா? நீங்கள் என்ன சொன்னீர்கள்? குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள், பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள், ஒரு சம்பவம்கூட நடக்காது என்று சொன்னீர்கள். ஆனால், இதுவரைக்கும் தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குப் பெண்களுக்கு எதிராகவும் குழந்தைகளுக்கு எதிராகவும் குற்றங்கள் நடக்கின்றன.

எந்தப் பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது. ஆளுங்கட்சியாலேயே பாதுகாப்பு இல்லை என்று சொல்லக்கூடிய நிலைதான் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அதையும் நியாயப்படுத்திக்கொள்கிறார்கள்.

தீபாவளி குற்றங்களை ஒப்பிடுவதா?

போன வருடம் தீபாவளிக்கு இத்தனை குற்றங்கள் நடந்தன, அதற்கு முந்தைய வருடம் இவ்வளவு நடந்தன, இந்த வருடம் இவ்வளவு நடந்திருக்கின்றன என்று ஒப்பீடு செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் ஒப்பீட்டின்படி, போன வருடம் திமுக ஆட்சியில் 6 குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த வருடம் 11 நடைபெற்றிருக்கின்றன என்றால், திமுக ஆட்சியில் அதற்கு முன்பு 11 ஆக இருந்த குற்றங்களை 6 ஆகக் குறைத்திருக்கிறார்கள். நீங்கள் அதை மறுபடியும் பழையபடியே கொண்டுபோய்விட்டு, நீங்களே பேசுவதைக் கேட்டு வெட்கப்படக்கூடிய அளவுக்குப் பேசுகிறீர்கள். அதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சியின் நிலை.

திமுக அடுத்து என்ன செய்யப்போகிறது?

கேள்வி: இந்தச் சம்பவத்தில் திமுக சார்பில் போராட்டம் நடத்தினீர்கள். இதற்குப் பிறகு வேறு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறீர்கள்?

பதில்: எங்கள் திமுக சார்பில் போராட்டங்கள் நடத்த முடியும். எங்கள் தலைவர் தொடர்ந்து பேச முடியும். இதைப்பற்றித் தொடர்ந்து வலியுறுத்த முடியும். சட்டமன்றம் நடந்தால் அங்கே பேச முடியும். ஆனால், ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் மனசாட்சியோடு இந்த மாதிரியான குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்குக் காவல்துறையைப் பயன்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு, தங்களுடைய பாதுகாப்புக்காக மட்டுமே இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அதைத் தாண்டி, குற்றம் நடந்த பிறகு அந்தக் குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டுபிடித்து, குழந்தைகளை மீட்டெடுப்பதற்கும் காணாமல் போன பெண்களை மீட்பதற்கும் வழிவகையைக் கண்டறிய வேண்டும். அதைச் செய்யாமல் யாருக்குமே நம்பிக்கை இல்லாத ஒரு நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். அதனால்தான் சொல்கிறேன். முதலமைச்சருக்கே தன்னுடைய ஆட்சியில் தனக்குப் பாதுகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கை இல்லாத நிலைமை இருக்கிறது.

‘Always Well’ அட்டை குறித்து…

கேள்வி: நேற்று பள்ளி மாணவர்கள் முதலமைச்சருக்குக் கேக் கொடுத்தபோது ‘Always Well’ என்று எழுதப்பட்ட அட்டையையும் கொடுத்திருக்கிறார்கள். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: இதைவிடச் சிறந்த முரண்நகை எதுவும் இருக்க முடியாது. இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel