“இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” : ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம்!

Published On:

| By Kavi

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கேட்டு பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கை கடந்த மார்ச் 28 ஆம் தேதி தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு நிராகரித்து உத்தரவிட்டார். 

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. 

இந்த மனு கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் முன்பு விசாரணைக்கு வந்த போது, அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதை விசாரித்த நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

இந்நிலையில், நேற்று ஓபிஎஸ் தரப்பில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு இன்று (ஏப்ரல் 12) நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது,  வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த பன்னீர் தரப்பு,  “வரும் ஏப்ரல் 16ஆம் தேதி அதிமுக செயற்குழு நடைபெற உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.

புதிய உறுப்பினர்கள் சேர்க்கையின் போது தங்கள் அணியை சார்ந்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்கோ, அல்லது அவர்களது பதவி காலாவதி ஆவதற்கோ வாய்ப்பு இருக்கிறது” என்று வாதிடப்பட்டது. 

அப்போது இடைமறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில்,  “6 மாத காலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்.

இது புதிய நடைமுறை அல்ல, ஆண்டுதோறும் நடைபெறக் கூடிய நடைமுறை. இப்போதைக்கு  இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து, “கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 16ஆம் தேதி முடிவுகள் எடுக்கப்படும். வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்ரல் 20ஆம் தேதி என்பதால் 16ஆம் தேதி செயற் குழு அறிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பினர் வழக்குகள் மூலமாக கட்சி நடவடிக்கைகளை இழுத்தடிக்கின்றனர். ஓபிஎஸ் கைகள் கட்டப்படவில்லை.

எது நடந்தாலும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டதுதான் 2,665பொதுக்குழு உறுப்பினர்களில் 4பேர் மட்டும் தான் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர்” என்றும் எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், “புதிய உறுப்பினர் சேர்க்கை உட்பட எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது.

ஏற்கனவே உள்ள உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் இருக்க வேண்டும். ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்படும்.

தேவைப்பட்டால் 24ஆம் தேதியும் விசாரணை நடத்தப்படும். இவ்வழக்கில் தற்போது எந்தஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர். 

பிரியா

அதிமுக பொதுச்செயலாளர் – 10 நாட்களில் முடிவு : தேர்தல் ஆணையம்!

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

ops appeal case
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share