அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரிய வழக்கில் 10 நாட்களில் முடிவு தெரிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடர்ந்திருந்தார். 2022 ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட கழக சட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் மனு கடந்த 10ஆம் தேதி நீதிபதி பிரதீபா சிங் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் தங்கள் தரப்பையும் சேர்க்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் கோரிக்கை வைத்தது. தேர்தல் ஆணையம் தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, கர்நாடக தேர்தலில் போட்டியிட இருப்பதால் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி பிரதீபா சிங் தான் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக கூறி மனுவை வேறு நீதிபதி முன் ஏப்ரல் 12ஆம் தேதி பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 12) டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரிய விவகாரத்தில் 10 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரியா