இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) காலை 9 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்கியது.
அஸ்வின், ஜடேஜா அசத்தல்!
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக கடைசி வரை போராடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களும், பேர்ஸ்டோ 37 ரன்களும் மற்றும் தொடக்க வீரர் பென் டக்கெட் 35 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், அக்சர் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்!
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களுக்கு ஜாக் லீச் பந்துவீச்சில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
ஜெய்ஸ்வால் 76 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணியை விட 127 ரன்கள் பின் தங்கியுள்ள உள்ள நிலையில், இந்திய அணி நாளை முன்னிலை பெறுவதுடன், இமாலய இலக்கையும் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆந்திராவில் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது… நடந்து என்ன?
உங்கள் மாநிலத்தில் என்ன ரியாக்ஷன்? ராமர் கோயில் பற்றி மத்திய அமைச்சர்களிடம் கேட்ட மோடி