DMK MLA’s son daughter-in-law arrested
வீட்டு பணிப்பெண் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவான திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகளை ஆந்திராவில் போலீசார் இன்று (ஜனவரி 25) கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மகன் ஆண்டோ மதிவாணனின் வீட்டில் கள்ளக்குறிச்சையை சேர்ந்த ரேகா என்ற இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தன்னை கடந்த 7 மாதங்களாக மதிவாணனின் மனைவி மெர்லினா கரண்டி, துடைப்பத்தால், அடிப்பது, சூடு வைப்பது என கடும் சித்ரவதை செய்ததாக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரேகா புகார் அளித்தார்.
அதன்படி ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா மீது குழந்தை பாதுகாப்பு சட்டம், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட மதிவாணன் மற்றும் மெர்லினா இருவரும் தலைமறைவானதை அடுத்து அவர்களை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினாவை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் பற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, “ஆண்டோ மதிவாணன் தனது தந்தையான திமுக எம்.எல்.ஏ இ.கருணாநிதியுடன் வருட கணக்காக பேசுவதே இல்லை. அவர் சில நாட்களுக்கு முன்பு தனது அம்மாவிடம் போனில் பேசியிருக்கிறார்.
அப்போது ’இந்த வழக்கில் முன் ஜாமீனுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. எனவே சரணடைவது தான் ஒரே வழி என்று உன் அப்பா சொன்னார்.
அதனால் நீ போலீஸை தொடர்பு கொண்டு பேசி சரணடைந்துவிடு’ என்று அம்மா அட்வைஸ் செய்திருக்கிறார்.
இதன்பேரில் மதிவாணன் தனிப்படையை தொடர்பு கொண்டு தனது இருப்பிடம் பற்றி தெரிவித்த நிலையில், அவர்கள் சென்று கைது செய்துள்ளார்கள்” என்கிறார்கள்.
மேலும் கைதான அவர்களை சென்னை அழைத்து வந்து, காவல்நிலையத்தில் விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அவர்கள் சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலித்து சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு இன்று அழைத்து வரப்பட்ட பணிப்பெண்ணுக்கு 7 பேர் கொண்ட மருத்துவக் குழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
செய்தியாளர் மீது தாக்குதல் : இருவர் கைது!
திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் சித்ரவதை: பணிப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை!
இந்தியா வந்தார் பிரான்ஸ் அதிபர்!
DMK MLA’s son daughter-in-law arrested