அயோத்தி புதிய ராமர் கோயிலுக்கு செல்வது பற்றி மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். மேலும் ராமர் கோயில் பற்றிய விஷயங்களை மத்திய அமைச்சர்களிடமும் கேட்டுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி புதிதாக நிறுவப்பட்ட பால ராமர் சிலைக்கு பூஜைகள் செய்து வழிபட்டார்.
அப்போது பிரதமர் மோடி மட்டுமே அயோத்தியில் இருந்தார். ராஜ் நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஆங்காங்கே உள்ள ராமர் கோயில்களில் சிறப்பு பூஜைகளை நடத்தினார். இதை கூட, பிரதமர் மோடி தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்வதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜனவரி 24 ஆம் தேதி கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியை பாராட்டும் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.
‘நம் நாட்டின் உடல் 1947 இல் சுதந்திரம் பெற்றது, ஆனால் அதன் ஆன்மாவின் சுதந்திரம் ஜனவரி 22, 2023 அன்று பிரதமர் மூலம் நடந்ததிருக்கிறது. பல நூற்றாண்டுகளின் காத்திருப்புக்குப் பிறகு வந்த இந்திய நாகரிகத்திற்கான ஒரு தருணம். அரசியல் ரீதியாக அல்ல, ஆனால் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் ராம பிரான் பிரதிஷ்டைக்கு விதி உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
பிரதமர் மக்களிடம் பெற்ற அன்பின் அளவைக் கருத்தில் கொண்டு, அவர் வெகுஜனத் தலைவராக மட்டுமல்ல, இப்போது புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்’ என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, ராமர் கோவில் கட்டியது பற்றியும் புதிய ராமர் சிலை நிறுவியது பற்றியும் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் கேட்டறிந்தார். ஒவ்வொரு அமைச்சரும் தத்தமது மாநிலத்தில் நிலவிய சூழலை எடுத்துரைத்தனர்.
இதன் பின் மத்திய அமைச்சர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “நாடு முழுவதிலும் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் அயோத்திக்கு திரண்டு வருகிறார்கள். நாம் இதை மக்களுக்காகவே செய்துள்ளோம். இந்த நேரத்தில் விவிஐபிகளான நாம் சென்றால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். அதனால் அயோத்தி செல்வதை சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு மோடி தனது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “தற்போது எந்த அமைச்சரும் அயோத்திக்கு செல்லும் திட்டம் இல்லை. உத்தரபிரதேச அரசு எடுக்கும் முடிவுகள் மற்றும் அறிவுரைகளை மனதில் வைத்து மக்கள் அயோத்திக்கு செல்ல வேண்டும்” என்று கூறினார்.
ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு 23 ஆம் தேதி செவ்வாய் கிழமை முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று மட்டும் 5 லட்சம் பேர் ராமரை தரிசித்தனர். தொடர்ந்து அயோத்தியில் கூட்டம் அலைமோதுகிறது.
அயோத்தியின் நிலையை லக்னோவில் இருந்தபடியே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காணொலி மூலம் ஆய்வு செய்தார். அதன் பின் அயோத்திக்குள் இன்னும் சில நாட்களுக்கு எவ்வித வாகனங்களையும் அனுமதிக்கவில்லை என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் இப்போதைக்கு அயோத்திக்கு செல்ல வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களுக்கு மோடி உத்தரவிட்டுள்ளார்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆந்திராவில் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது… நடந்து என்ன?
இந்தியா வந்தார் பிரான்ஸ் அதிபர்!