கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, மின்சார அடுப்பின் வசதி என்று பல காரணங்களால் இப்போது நிறைய வீடுகளில் இண்டக்ஷன் அடுப்பு வாங்குகிறார்கள். ஆனால் பழைய கேஸ் அடுப்பில் பயன்படுத்திய எல்லாப் பாத்திரங்களையும் இதில் வைக்க முடியாது என்பது பலருக்குத் தெரிவதில்லை. இண்டக்ஷன் அடுப்பு மின்காந்தத் தொழில்நுட்பத்தில் வேலை செய்வதால், குறிப்பிட்ட தன்மை உள்ள பாத்திரங்கள் மட்டுமே அதில் சூடாகும்.
எந்தப் பாத்திரங்கள் ஓகே?
- இரும்புக் கடாய், தோசைக்கல், காஸ்ட் அயர்ன் பாத்திரங்கள் மிகவும் பொருத்தமானவை.
- அடிப்பகுதியில் காந்தம் ஒட்டக்கூடிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களும் நன்றாக வேலை செய்யும்.
- இனாமல் பூசப்பட்ட இரும்புப் பாத்திரங்களையும் பயன்படுத்தலாம்.
எவற்றை நேரடியாக வைக்க முடியாது?
சாதாரண அலுமினியக் கடாய், குக்கர் ஆகியவற்றை நேரடியாக இண்டக்ஷன் அடுப்பில் வைக்க முடியாது. இரும்பு அல்லது ஸ்டீல் அடிப்பகுதி இல்லாத செம்புப் பாத்திரங்களும் வேலை செய்யாது. பித்தளை, வெண்கலம், கண்ணாடி, பீங்கான், மண்பானைகளையும் நேரடியாக வைக்க முடியாது. ஆனால், அலுமினியம் அல்லது செம்புப் பாத்திரத்தின் அடியில் இண்டக்ஷனுக்கு ஏற்ற காந்தத்தன்மை உள்ள தகடு பொருத்தியிருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம்.
காந்தம் வைத்து வீட்டிலேயே சோதிக்கலாம்
ஒரு சின்னக் காந்தத்தைப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் வையுங்கள். காந்தம் உறுதியாக ஒட்டிக்கொண்டால், அந்தப் பாத்திரம் இண்டக்ஷனுக்குப் பொருந்த வாய்ப்பு உண்டு. கூடவே, பாத்திரத்தின் அடிப்பகுதி தட்டையாக இருக்க வேண்டும்.
பாத்திரத்தின் அளவும் முக்கியம்
இண்டக்ஷன் அடுப்பின் வெப்ப வட்டத்துக்கு ஏற்ற அளவில் பாத்திரம் இருக்க வேண்டும். ரொம்பச் சிறிய அல்லது ரொம்பப் பெரிய பாத்திரம் வெப்பம் பரவுவதைப் பாதிக்கும். சிறிய பாத்திரம் பயன்படுத்த வேண்டிய நிலையில் இண்டக்ஷன் அடாப்டரைப் பயன்படுத்தலாம். அடியில் மேடு பள்ளம் இல்லாமல் இருப்பதும் அவசியம்.
அதனால் இண்டக்ஷன் அடுப்பு வாங்கிய பிறகு, பழைய பாத்திரங்களை வைத்துத் தள்ளாடுவதைவிட, அதற்குப் பொருத்தமான பாத்திரங்களை வாங்கிக்கொள்வதுதான் சமையலை எளிதாக்கும்.










