லண்டனில் கடந்த மாதம் வரலாற்று சிறப்புமிக்க தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்ததை அடுத்து, இளையராஜா தன் வாழ்வின் இசை அனுபவங்களை இளைய தலைமுறையினருக்கு சுட சுட பகிர்ந்து வருகிறார். ilaiyaraaja condition to vijayakanth superhit movie
அந்த வகையில் சமீபத்தில் நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகை செல்வனுடன் நடந்த உரையாடலின் போது, கதையும் இல்லாமல் சிச்சுவேஷனும் சொல்லாத எத்தனையோ படங்களுக்கு தான் பாடல் அமைத்த தருணங்களை சுவாரசியமாக பகிர்ந்திருந்தார் இளையராஜா.
அப்படிதான் கமல்ஹாசனின் ராஜபார்வை, நாடோடி தென்றல் உள்ளிட்ட எத்தனையோ படங்களுக்கு இசையமைத்ததாக தெரிவித்தார்.
அந்த வகையில் விஜயகாந்த் நடிப்பில் 1984ஆம் ஆண்டு வெளியான வைதேகி காத்திருந்தாள் படத்திற்கும் கதையே கேட்காமல் இசையமைத்ததாகவும், ஆனால் அதற்கு முன்னர் ஒரு முக்கியமான கண்டிஷன் போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வைதேகி காத்திருந்தாள்” படத்தில் வரும் அத்தனை பாடல்களும் கதையே இல்லாமல் உருவான பாடல்கள் தான். “காக்கி சட்டை” படத்துடைய கம்போசிங்கிற்காக, முதுமலை ரிசார்ட்ஸ்க்கு சென்றிருந்தோம். “மூன்று நாள் கம்போஸ் செய்யலாம்” என முடிவு செய்திருந்தோம். ஆனால், மதிய உணவுக்குள்ளாக கம்போசிங் முடிந்து விட்டது.
மாலை டியூனை ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தேன். ஆறு பாடல்களுக்கு டியூன் முடிந்துவிட்டது.
அப்போது இயக்குனர் ராஜசேகரிடம், “இந்த ஆறு டியூனையும் ஒரே படத்தில் வைப்பதாக இருந்தால் அதை தருகிறேன். இல்லாவிட்டால் யாருக்கும் கிடையாது என்று… அதற்கு அவர், “பண்ணிடுவோம் சார், இந்த டியூன் எல்லாம் நன்றாக இருக்கு” என்றார்.
தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் என்ன பண்ணுவார்னா, அவருக்கு கம்போசிங் டைம் கொடுக்காவிட்டாலும், அவர் ’கம்போசிங் டேப் கொடுத்து அனுப்பு, கேட்கலாம்’ என்பார். அவருக்கு டேப் கொடுத்தோம். அதில் ஒரு பாடலை சொல்லி, “அதை எனக்கு ரெக்கார்ட் பண்ணி கொடு, ஷூட்டிங்கில் ஆட்கள் வெயிட் பண்றாங்க” என்றார். ஆனால், அவர் படம் ஆரம்பித்தாரா என்பது தெரியாது.
அவரிடம், “ஒரு பாட்டு மட்டும் யாருக்கும் கொடுக்க மாட்டேன். வேண்டுமென்றால், அனைத்து ஆறு டியூனையும் ஒரே படத்தில் வைப்பதாக இருந்தால் தருகிறேன்” என்றேன். அவர் சம்மதித்தார். அதன் பிறகு அந்தப் பாடல்களை ரெக்கார்ட் செய்து, அதை வைத்துக்கொண்டு கதையை வடிவமைத்தார்கள். அப்படி உருவானதுதான் “வைதேகி காத்திருந்தாள்” படம்” எனத் தெரிவித்தார் இளையராஜா.

1984ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் நூறு நாட்களை கடந்து ஓடியது. விஜயகாந்தின் நடிப்பும், இளையராஜாவின் இசையும் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்த படத்தில் தான், ’ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’, ’அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட’, ’மேகம் கருக்கையில புள்ள தேகம் குளிருதடி’, ‘காத்திருந்து காத்திருந்து’ உள்ளிட்ட மனதை வருடும் சூப்பர் ஹிட் பாடல்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
