நேதாஜி மட்டும் இல்லையென்றால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜனவரி 23) தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 127-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “சுதந்திர போராட்ட வீரர்கள் நமது நமது இதயத்திலும், டிஎன்ஏவிலும் இன்னும் உயிர்வாழ்கிறார்கள். அவர்களை அவ்வளவு சீக்கிரம் நமது இதயத்திலிருந்து நீக்க முடியாது.
இந்திய ராணுவத்தில் தமிழர்கள் தான் அதிகளவில் இருக்கிறார்கள். பாரதியார், வஉசி, வேலுநாச்சியார் போன்றோர் நேதாஜியுடன் இணைந்து சுதந்திரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர போராட்ட காலத்திலேயே பெண் பட்டாலியன்களை நேதாஜி பயன்படுத்தியுள்ளார். தற்போது பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தில் பெண்கள் விமானத்தை இயக்குகிறார்கள்.
நேதாஜி மட்டும் இல்லையென்றால் இந்தியாவிற்கு 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்திருக்காது.
இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில் 1942-ஆம் ஆண்டுக்கு பிறகு காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை. முகமது அலி ஜின்னா கீழ் இயங்கிய முஸ்லீக் லீக் தனி நாடு கோரி போராட்டத்தை முன்னெடுத்தது. அதனால் இந்தியர்களான நாம் பிரிந்துவிட்டோம்.
ஆங்கிலேயர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டார். அதனால் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அவர்களை தோற்கடித்தார்.
1946-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆங்கிலேய கடற்படையில் பணியாற்றிய இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, 20 போர் கப்பல்களை கைப்பற்றினர்.
ஆங்கிலேயர்களிடம் பணியாற்றிய இந்திய ராணுவ வீரர்கள் நேதாஜி தலைமையில் சுதந்திர போராட்டத்திற்கு பெரும்பங்காற்றினார்கள்.
இதனால் ஆங்கிலேயர்கள் தங்களிடம் பணியாற்றிய இந்திய வீரர்களை நம்பவில்லை. மேலும், இந்தியாவில் இருப்பது நமக்கு பாதுகாப்பில்லை என்பதை முதல்முறையாக அப்போது தான் அவர்கள் உணர்ந்தார்கள். இதன்காரணமாக, அடுத்த 15 மாதங்களில் இந்தியாவை விட்டு நாங்கள் வெளியேறுவோம் என்று வெளிப்படையாக அறிவித்தனர்.
ஆனால், நேதாஜியின் இந்த சுதந்திர போராட்ட பங்கு குறித்து பெரிதாக யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை. ஏன் பேச கூட செய்வதில்லை. இங்குள்ள மாணவர்கள் நேதாஜியின் சுதந்திர போராட்ட பங்கு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Comments are closed.