வைஃபை ஆன் செய்ததும் ஒரு முக்கியமான போட்டோ இன்பாக்சில் வந்து விழுந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் நீண்ட வரிசையில் அமர்ந்து ஆலோசனை நடத்தும் போட்டோதான் அது.
சில நிமிட விசாரணைக்குப் பின் வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“இன்று செப்டம்பர் 21 காலை 9.30 முதல் 10.30 வரை சென்னை எம்.ஆர்.சி. நகரில் அமைந்துள்ள இந்தியன் பேங்க் கெஸ்ட் ஹவுஸில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஒரு முக்கியமான கூட்டம் நடந்திருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்தியாவிலேயே இல்லை,. மேலும் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா டெல்லியில் இருக்கிறார். இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டம் பாஜக வட்டாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனையில் தமிழக பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம். மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், துணை தலைவர் பால் கனகராஜ், வினோஜ், எஸ்.ஜி.சூர்யா, அறிவுசார் பிரிவு தலைவர் ஷெல்வீ, டால்பின் ஸ்ரீதர்,ஆனந்தபிரியா, மீடியா ரங்கா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது முன்னாள் பாஜக மாநிலப் பொதுச் செயலாளரும் அண்ணாமலையால் ஓரங்கப்பட்டப்பட்டவருமான கே.டி.ராகவன் தான். அவர்தான் இந்த நிர்வாகிகளுக்கு போன் போட்டு, ‘ஃபைனான்ஸ் மினிஸ்டர் உங்க கூட மனம் விட்டு பேச நினைக்கிறார். இந்தியன் பேங்க் கெஸ்ட் ஹவுஸுக்கு வாங்க’ என்று அழைத்திருக்கிறார். அதாவது நிர்மலா சீதாராமன் சார்பாக கே.டி.ராகவன் அழைத்துதான் இந்த கூட்டமே கூட்டப்பட்டிருக்கிறது.
அனைவரோடும் காலை உணவு சாப்பிட்ட நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி சுமார் ஒரு மணி நேரம் விவாதித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த கோவை அன்னபூர்ணா விவகாரத்தில் இருந்து திமுக, அதிமுக கட்சிகள், மற்ற கட்சிகளில் நடக்கும் விஷயங்கள் வரை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
’அன்னபூர்ணா விவகாரத்துல நாம ஏதோ அவரை கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேக்க வச்சிட்ட மாதிரி பெரிய ப்ராபகண்டா பண்ணிட்டாங்க. அது ரொம்ப தப்பு. நம்ம சைடு நியாயத்தை இந்த விஷயத்துல நாம சொல்ல சான்ஸ் இல்லாம போயிடுச்சு (அண்ணாமலை திடீரென மன்னிப்பு கேட்டதைத்தான் இப்படி குறிப்பிடுகிறார்)
அந்த கூட்டத்துல அன்னபூர்ணா சீனிவாசன் பேசின பேச்சு, ஆட்டிடியூடு எதுவுமே நல்லா இல்ல. ஆனா நாம அதையும் லைட்டாதான் எடுத்துக்கிட்டோம். ஆனா கூட்டம் முடிஞ்சவுடன அன்னபூர்னா சீனிவாசனே வானதிக்கு போன் போட்டு, ‘மேடம்… சாரி மேடம். நான பேசினதப் பாத்து என் மனைவியே என்னை திட்டுறாங்க. இப்படியெல்லாம் நீங்க பேசியிருக்கக் கூடாதுனு சொன்னாங்க. உங்களையும் நிதியமைச்சரையும் பாத்து சாரி கேட்கணும் டயம் கொடுங்க’னு கேட்டாரு. அப்புறம்தான் வரச் சொன்னோம் ‘ என மனம் விட்டுப் பேசியிருக்கிறார். அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ எப்படி வெளிவந்தது என்பது பற்றி நிர்மலா ஏதும் கூறவில்லை.
மேலும், நிதியமைச்சர் என்ற முறையில் தமிழ்நாட்டின் சில அரசுத் துறைகள் பற்றியும் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருக்கிறார். தமிழ்நாடு மின்சார வாரியத்துல பெரிய அளவு முறைகேடுகள் நடக்குது, மெட்ரோ ரயில் திட்டத்துல ஃபர்ஸ்ட் ஃபேஸ்லயே ஏகப்பட்டது வாங்கிட்டாங்க.
இப்ப நாம ஏதோ கொடுக்காதது போல அரசியல் பண்ணிக்கிட்டிருக்காங்க, அதேபோல ஸ்டேட் கமர்ஷியல் டாக்ஸ் டிபார்ட்மென்ட்ல பெரிய அளவு முறைகேடு நடக்குறதாகவும் எனக்கு கம்ப்ளைன்ட்ஸ் வந்திருக்கு’ என பேசியிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
இந்தக் கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவரும் சென்னை பெருங்கோட்டப் பொறுப்பாளரான கரு. நாகராஜன், முன்னாள் ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் அழைக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த கூட்டம் பற்றி லண்டனில் இருக்கும் அண்ணாமலைக்கு அமர்பிரசாத் ரெட்டி தகவல் தெரிவித்துவிட்டார். கூட்டத்தில் என்ன நடந்தது என்பதுபற்றி அண்ணாமலையும் லண்டனில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அவர் யாருக்கும் நேரடியாக போன் போடாமல் அமர்பிரசாத் மூலமாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். மாநில உளவுத் துறையும் இந்த கூட்டம் பற்றி தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துவிட்டது.
அதற்குள் தமிழக பாஜக வட்டாரத்தில், ‘பா.ஜ.க மாநில நிர்வாகிகளுடன் உறுப்பினர் சேர்க்கை, தமிழகத்தில் பா.ஜ.க-வின் நிலை, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்தார்’ என்று ஹாட் விவாதம் பரவிக் கொண்டிருக்கிறது.
அரசு முறை பயணமாக எப்போதும் வந்து செல்லும், நிர்மலா சீதாராமனின் இந்த அரசியல் சந்திப்பு பாஜக – வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
விரைவில் பாஜக தேசிய அளவிலும், சில மாநில தலைமையிலும் மாற்றம் கொண்டு வரவுள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டம் அதுவும் கே.டி.ராகவன் ஒருங்கிணைப்பில் நடந்திருக்கும் இந்தக் கூட்டம் அடுத்த கட்ட மாற்றத்துக்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு!