திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல்லைச் சேர்ந்த பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 21) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில், திருப்பதியில் வழங்கப்பட்ட லட்டில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், ‘ராஜ் பால்’ என்கிற பெயரில் நெய் வினியோகித்து வருகிற, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தரமற்ற நெய்யைத் திருப்பதிக்கு வழங்கியதாகவும், அதைத் திருப்பதி தேவஸ்தானம் திருப்பி அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக ஏஆர் ஃபுட்ஸ் டெய்ரி அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அவர்கள் கூறுகையில் “நாங்கள் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வினியோகித்தோம். அதற்குப் பிறகு நாங்கள் திருப்பதிக்கு அனுப்புவது இல்லை. ஆனால், தற்போது எழுந்துள்ள சர்ச்சையில் எங்களை குறிப்பிட்டுப் பேசி வருகிறார்கள்.
எங்களுடைய தயாரிப்பு பொருட்கள் அனைத்து இடத்திலும் உள்ளது. அதில் எந்த இடத்திலிருந்தும், நீங்கள் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பலாம். திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தாக கூறப்படும் நெய்யில் எங்களது நிறுவனத்தின் பெயர் இல்லை” என்று குறிப்பிட்டனர்.
மேலும், ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அனிதா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தி, மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையில் , மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா இந்த திருப்பதி லட்டு விவகாரம் குறித்து மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் (FSSAI) இன்று ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: ராகுல்காந்தி வேதனை!
பழனி பஞ்சாமிர்தம்: விலங்கு கொழுப்பு நெய் பயன்படுத்தப்படுகிறதா? – சேகர்பாபு விளக்கம்!
அமிதாப் பச்சன் Vs ரஜினி: தெறிக்கும் தோட்டா… மிரட்டும் ‘வேட்டையன்’ டிரைலர்!