இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில், பல மாநிலங்களிலும் வெப்ப அலை மிகத்தீவிரமாக வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அந்தவகையில், டெல்லி முங்கேஷ்பூரில் இன்று புதிய உச்சமாக 126.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுதான் டெல்லியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், டெல்லி வானிலை ஆய்வு மைய தலைவர் குல்தீப் ஸ்ரீவத்ஸவா கூறும்போது, “டெல்லியின் புறநகர் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை இன்று வீசியுள்ளது. குறிப்பாக முங்கேஷ்பூர், நரேலா, நஜப்கர் பகுதிகளில் அனல் காற்றானது அதிக வேகத்தில் வீசியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வெப்பம் அதிகரித்துள்ளதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, சமவெளி பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ், கடலோர பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ், மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தால் வெப்ப அலை என்று அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடும் வெப்பம் காரணமாக டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை தடுப்பதற்காக, தண்ணீரை தேவையின்றி பயன்படுத்துபவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி நீர்வளத்துறை உத்தரவிட்டனர்.
கட்டுமான பணிகள், வாகனங்களை கழுவுவதற்காக தண்ணீரை பயன்படுத்தினால், ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீரை வீணடிப்பவர்களை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிணற்றில் விழுந்த குட்டி யானை:11 மணி நேரம்… போராடி மீட்ட வனத்துறை!
பிரதமரின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்க: தேர்தல் அலுவலரிடம் திமுக மனு!