பூண்டி நீர்த்தேக்க கொள்ளளவு உயருகிறது… நீர்வளத்துறை முடிவு!

Published On:

| By Raj

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை 35 அடியிலிருந்து 37 அடியாக உயர்த்த திட்டமிட்டு வருவதாக நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Capacity of Poondi Reservoir

சென்னைக்கு அருகே இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளாக இந்த ஏரி சென்னையின் தாகத்தைத் தணித்து வருகிறது.

காவிரி நீருக்காக கர்நாடகத்துடன் பல சச்சரவுகள் இருக்கும் நிலையில், மிக சுமூகமான முறையில், ஆந்திராவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 40 ஆண்டுகளாக பூண்டி நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் உள்ளன. இதில், பூண்டி நீர்த்தேக்கம்தான் சென்னை குடிநீருக்காக அமைக்கப்பட்ட முதல் நீர்த்தேக்கம்.

அதன்பிறகு புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகள் சென்னை குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. என்னதான் மற்ற நீர்த்தேக்கங்களில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டாலும், முக்கிய நீராதாரமாக விளங்குவது பூண்டி நீர்த்தேக்கம்தான்.

பூண்டி நீர்த்தேக்கம் கட்டுவதற்கு 1940-ம் ஆண்டு ரூ.61.07 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில், 2 பங்கு தொகையை சென்னை மாநகராட்சிக்கு ஆங்கிலேய அரசாங்கம் கடனாகவும், ஒரு பங்கு தொகையை மானியமாகவும் கொடுத்தது.

1940-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி சென்னை மாகாண கவர்னராக இருந்த ஆதர் ஹோப், பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நீர்த்தேக்கத்தை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிட்டனர். ஆனால், இரண்டாம் உலகப் போர், மழை வெள்ளம் போன்ற காரணங்களால் ஏற்பட்ட தாமதம் திட்டத்தை முடிக்க நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஒருவழியாக 65 லட்சம் ரூபாயில் பூண்டி நீர்த்தேக்கத்தை கட்டி முடித்தனர். Capacity of Poondi Reservoir

பூண்டி அணைக்கட்டின் நீளம் 770 அடி, அகலம் 18 அடி. 35 அடி உயரம் நீர்மட்டம் கொண்ட இந்த அணைக்கட்டில் 3,231 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். 16 மதகுகள் கொண்ட இந்த அணைக்கட்டில் இருந்து மழை வெள்ளக் காலத்தில் விநாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்ற முடியும்.

ஆரம்பத்தில் இதில் 2.750 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது. அதன் பிறகு ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டு 1990 முதல் 1996-ம் ஆண்டு வரை பணிகள் நடந்தன. இதை அடுத்து தற்போது 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. Capacity of Poondi Reservoir

இந்த நிலையில் நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், ‘பூண்டி நீர்த்தேக்கம், பெருநகர சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாகும். பெருகி வரும் சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய, நீர்நிலைகளின் சேமிப்பு கொள்ளளவை அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவை ஆகும். அவற்றில் ஒன்று பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகரிப்பதாகும். Capacity of Poondi Reservoir

அதன்படி, நீர்த்தேக்கத்தின் முழு நீர் மட்டத்தை மேலும் இரண்டு அடி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய ரூ.48 லட்சத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தை பலப்படுத்தி நீர்மட்டத்தை 35 அடியிலிருந்து 37 அடியாக உயர்த்துவதன் மூலம் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை 3.231 டி.எம்.சி. யிலிருந்து 3.971 டி.எம்.சி-யாக உயர்த்த இயலும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

எனவே, தற்போது உள்ள கொள்ளளவினைவிட 0.74 டி.எம்.சி நீரை கூடுதலாக சேமிக்க இயலும். தற்போது இத்திட்டத்திற்கான விரிவான ஆய்வுப் பணிகள் முடிவுற்று விரிவான திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share