இந்திய வானிலை ஆய்வு மையம் வருகிற அக்டோபர் 23-ஆம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அதற்கு ‘டானா’ என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளது.
மத்திய – கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடலோரம், அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கவுள்ளது. அது படிப்படியாக வலுவடைந்து, வருகிற 23-ஆம் தேதி மத்திய – கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ‘டானா’ புயலாக உருமாற வாய்ப்பு இருக்கிறது.

அதற்குப் பின் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா – மேற்கு வங்காள கரையோரம் அக்டோபர் 24ஆம் தேதி காலை கரையைக்கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 20) மதியம் 12 மணி வாக்கில் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்த வரை நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சில இடங்களில் மழை பெய்தது. மேலும் ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான் ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், சில நாட்களுக்குச் சென்னையில் இரவில் மழை பெய்வது தொடரும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
“20.10.2024: வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21.10.2024: இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக்கடல் பகுதிகள்:
20.10.2024: அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21.10.2024: அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று அறிவித்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
முன்னாள் ‘ரா’ ஏஜெண்ட் விகாஷ் யாதவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதில் சிக்கல்!
பாலியல் புகார் : ஈஷா ஹோம் ஸ்கூல் நிர்வாகம் மறுப்பு!
2 லட்சம் கோடி நிதி பற்றாக்குறை : நெருக்கடியில் அமெரிக்காவின் அடுத்த அதிபர்!
