பாலியல் புகாரை முன்வைத்த யாமினியின் குற்றச்சாட்டுக்கு ஈஷா ஹோம் ஸ்கூல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவர் வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
ஈஷா யோகா மையத்திற்கு எதிரான ஆட்கொணர்வு மனு வழக்கை கடந்த 18ஆம் தேதி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முடித்து வைத்து உத்தரவிட்டது.
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய, ஆந்திராவின் ராஜமுந்திரியைச் சேர்ந்த ஈஷா அறக்கட்டளையின் முன்னாள் தன்னார்வத் தொண்டர்களான சத்ய நரேந்திர ரகானி மற்றும் யாமினி ரகானி தம்பதி ஈஷா யோகா மையத்தில் செயல்படும் ஈஷா ஹோம் ஸ்கூல் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.
இதுதொடர்பாக கடந்த 17ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கூறுகையில், “ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். ஈஷா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
ஈஷா அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் எந்த முறையையும் பின்பற்றாமல் தன்னிச்சையாக நடத்தப்படுகிறது. ஈஷா ஹோம் ஸ்கூலில் (IHS) சிறுவன் ஒருவன் மூன்று ஆண்டுகளாக எங்கள் மகனை பாலியல் வன்கொடுமை செய்தார். எங்களின் ஆண் குழந்தை மற்றும் எங்களின் நண்பரின் பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகினர்.
தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கான ஈஷா அறக்கட்டளையின் குழு உறுப்பினராக நாங்கள் செயல்பட்டு வந்தோம். அப்போது இது நடந்தது.
பள்ளியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாலும், அவர்கள் வெளியே சொல்லாமல் அதை மறைத்தனர். 16 வயது சிறுவன் இறந்ததும் கூட அங்கே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது” என்று யாமினி தெரிவித்திருந்தார்.
ஈஷா ஹோம் ஸ்கூல் நிர்வாகம் மறுப்பு!
இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஈஷா ஹோம் ஸ்கூல், அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து யாமினி ராகினி என்பவர் கடந்த 17ஆம் தேதி நடைப்பெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
யாமினியின் மகன் ஈஷா ஹோம் ஸ்கூலில் பள்ளிக் கல்வி முடித்து வெளியேறிய பின்னர், அதே பள்ளியில் ஆசிரியராக ஜூன் 2022 முதல் மார்ச் 2024 வரை தன்னார்வ தொண்டு செய்தார்.
அவரின் மகன் ஹோம் ஸ்கூலில் பள்ளி கல்வி முடித்து வெளியேறும் போது, பள்ளிக்கு தனது சிறப்பான மதிப்புரைகளை வழங்கி சென்றுள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக குற்றம் நடந்ததாக கூறும் யாமினி, அதற்கு பிறகு அவரின் மகனை எதற்காக தொடர்ந்து அதே பள்ளியில் 3 ஆண்டுகள் படிக்க வைக்க வேண்டும்?
அவர் மீது பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் புகார்களை அளித்து வந்தனர். அதன் அடிப்படையில் அவரை பள்ளியை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதிலிருந்து, அவர் பல்வேறு நபர்களை தொடர்புகொண்டு தவறான குற்றச்சாட்டுகளால் ஈஷா அறக்கட்டளையை இழிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதுவும் குறிப்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முதல் நாள் ஏன் இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த வேண்டும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவர் கூறும் ‘குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை’. இதன் மீது சட்டப்படி உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
‘குழந்தைகளின் பாதுகாப்பு எப்போதும் எங்களின் முன்னுரிமையாக இருந்து வருகிறது’ என்பதை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறோம். எங்கள் குழந்தைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை சமரசம் செய்யும் எந்தவொரு நடத்தையையும் சிறிதளவும் ஏற்றுக்கொள்ளாத கடுமையான கொள்கைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்கனவே ஈஷா ஸ்கூல் குறித்து முழுமையான ஆய்வு செய்தது. மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகள், சமையலறைகள், குளியலறைகள், கழிவறைகள் உள்ளன.
மேலும் சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவுகள், மாசற்ற வெளிகள், மருத்துவ வசதிகளும், மனநல ஆலோசனைகள் போன்ற வசதிகளையும் மாணவர்களுக்கு ஈஷா ஸ்கூல் நிர்வாகம் வழங்குகிறது. இதுபோல எங்களது பள்ளியில் வழங்கப்படும் பல்வேறு அம்சங்களை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பாராட்டியுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
மேலும் ஈஷா ஹோம் ஸ்கூல், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும்” என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2 லட்சம் கோடி நிதி பற்றாக்குறை : நெருக்கடியில் அமெரிக்காவின் அடுத்த அதிபர்!