வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நாளை மறுநாள் ‘அக்வான்’ புயலாக உருவாகிறது!

By Mathi

|

Published on 14 Nov 2026, 8:43 AM

Cyclone Akvan

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (நவம்பர் 14) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது நாளை மறுநாள் மாலைக்குள் ‘அக்வான்’ புயலாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில், மத்திய அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடலில் நவம்பர் 13-ந் தேதி காலை 5.30 மணியளவில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

ADVERTISEMENT

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை காலை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.

பின்னர் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று, நவம்பர் 16-ந் தேதி மாலைக்குள் மத்திய வங்கக் கடலில் புயலாக உருவாகும். இதன் காரணமாக வங்கக் கடலில் அடுத்த சில நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, புயல் உருவாகும் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய புயலுக்கு ‘அக்வான்’ (Akvan) என்று பெயரிடப்படுகிறது. இந்தப் பெயரை ஈரான் நாடு பரிந்துரைத்துள்ளது. பாரசீக மொழியில் ‘அக்வான்’ என்பதற்கு அசுரன் அல்லது தீய சக்தி என்று பொருள். இந்த ‘அக்வான்’ புயல் ஆந்திரா மாநிலத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் வி. துரை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel