சென்னை மதுபான விடுதி விபத்து: மேலாளர் கைது!

Published On:

| By Selvam

சென்னை ஆழ்வார்பேட்டை ஷேக்மேட் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான வழக்கில் மேலாளர் சதீஷை காவல்துறையினர் இன்று (மார்ச் 29) கைது செய்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரும் ஷேக்மேட் தனியார் மதுபான விடுதியில் நேற்று இரவு மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மணிப்பூரை சேர்ந்த ஊழியர்கள் மேக்ஸ் (வயது 22), திருநங்கை லல்லி (வயது 22) சைக்கோள் ராஜ் (வயது 48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மதுபான விடுதியை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி அணையர் ராதாகிருஷ்ணன், விடுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் விடுதிக்கு சீல் வைத்தனர்.

மதுபான விடுதி அருகே மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால், அதன்காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், விபத்து நடந்த இடத்தில் இருந்து 240 அடி தொலைவில் தான் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், விபத்து நடந்தபோது அதிர்வுகள் எதுவும் ஏற்படவில்லை என்று விளக்கமளித்திருந்தது.

இந்தநிலையில், மதுபான விடுதி விபத்து தொடர்பாக மேலாளர் சதீஷ், உரிமையாளர் அசோக் ஆகியோர் மீது 304 ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) பிரிவின் கீழ் அபிராமிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில், தலைமறைவாக இருந்த மேலாளர் சதீஷை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். தொடர்ந்து உரிமையாளர் அஷோக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Gold Rate: ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்த தங்கம்… சவரன் ரூ.51,000-க்கு விற்பனை!

மோடியை எதிர்ப்பதாக உதயநிதி இரட்டை வேடம்: எடப்பாடி தாக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share