மோடியை எதிர்ப்பதாக உதயநிதி இரட்டை வேடம்: எடப்பாடி தாக்கு!

Published On:

| By Selvam

பிரதமர் மோடியை எதிர்ப்பது போல் உதயநிதி ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 29) குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை அக்கட்சியின்  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்,

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அதிமுக வேட்பாளர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்,

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி ” அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக அலை தான் வீசுகிறது .

நாங்கள் என்னென்ன சாதனைகள் செய்தோம் இனி என்னென்ன சாதனைகள் செய்யப் போகிறோம் என மக்களிடம் கூறுவதால் அதிமுக கூட்டணியை மக்கள் விரும்புகிறார்கள். தேர்தலில் மிட்டா மிராசுகள் நின்ற காலம் போய் சாமானிய தொண்டனும் போட்டியிடலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது

தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகின்ற திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம். பாஜக தவறு செய்தால் கேள்வி கேட்போம். தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடக் கூடிய 5 ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் நிற்க தகுதியானவர்கள். அதிமுகவில் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு. இது எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு அல்ல.

அதிமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதலமைச்சர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி எல்லாம் யாரும் விமர்சனம் செய்ததே இல்லை. ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தோல்வி பயத்தின் காரணமாக வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீரவசனம் பேசி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ஓடோடி சென்று பிரதமரை அழைத்து வருகிறார். பிரதமரிடத்தில் சரணாகதி அடைந்து விட்டு வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை வேடம் போடுகிறார்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சுங்கக் கட்டணம் உயர்வால் விலைவாசி உயரும் அபாயம்!

சென்னை மதுபான விடுதி விபத்து: உரிமையாளர் மீது வழக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel