இன்று (ஜூன் 1) திமுக பொதுக்குழு கூடும் நிலையில் நேற்று (மே 31) முரசொலியில் வந்த ஒன்றிய பிரிப்பு அறிவிப்பு சபாநாயகர் அப்பாவுவையும், அவரது ஆதரவாளர்களையும் கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. DMK Internal Party Clash
நெல்லை கிழக்கு திமுக மாவட்டச் செயலாளரான முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனுக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான அப்பாவுக்கும் இடையே உட்கட்சிப் பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. DMK Internal Party Clash
கடந்த 2022 இல் நடந்த திமுக உட்கட்சித் தேர்தலில் ஆவுடையப்பன் மாவட்டச் செயலாளர் ஆகக்கூடாது என்று அப்பாவு பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.
அந்தத் தேர்தலில் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு சிட்டிங் மாசெ ஆவுடையப்பன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சபாநாயகர் அப்பாவுவின் தீவிர ஆதரவாளரும் பாளை ஒன்றிய செயலாளருமான தங்கபாண்டியன் போட்டியிட்டார். மனு தாக்கல் செய்வதற்கு முன் அப்போது சென்னை பசுமை வழிச்சாலையில் சபாநாயகரின் இல்லமான குறிஞ்சி இல்லம் ( இப்போது குறிஞ்சி இல்லம் துணை முதல்வர் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது) சென்று அவரிடம் ஆசிபெற்று அதன் பின்னரே அறிவாலயம் சென்று மனு தாக்கல் செய்தனர். DMK Internal Party Clash

சீனியரான எனக்கு எதிராக அந்த சின்னப் பையன் மனு தாக்கல் செய்வதா என்று ஆவுடையப்பன் திமுக தலைவர் ஸ்டாலினிடம் சென்று கண்ணீர் விட்ட பிறகே… கடந்த 2022 செப்டம்பர் 23 ஆம் தேதி அறிவாலயத்தில் பஞ்சாயத்து பேசி முடித்து, மீண்டும் ஆவுடையப்பனே மாசெ ஆக அறிவிக்கப்பட்டார். இதனால் அப்பாவுக்கும் ஆவுடையப்பனுக்கும் இடையிலான மோதல் நீடித்தது.
இந்த நிலையில்தான் மே 31 ஆம் தேதி முரசொலியில் திருநெல்வெலி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ராதாபுரம் ஒன்றியத்தை பிரித்து அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே ராதாபுரம் கிழக்கு , மேற்கு என இருந்தது. இந்த இரண்டிலும் அப்பாவுவின் தீவிர ஆதரவாளர்களான வி.எஸ்.ஆர் ஜெகதீஷ், ஜோசப் பெல்சி இருந்து வந்தனர்.
இப்போது, ராதாபுரம் கிழக்கு ஒன்றியம்: 1. அப்புவிளை, 2. கரைச்சுத்து புதூர், 3. குமாரபுரம், 4. மகாதேவன்குளம், 5. ஆனைகுடி, 6. முதுமொத்தன்மொழி, 7. இடையன்குடி, 8. அணைக்கரை, 9. உறுமன்குளம் ஆகிய 9 ஊராட்சிகள் மற்றும் திசையன்விளை பேரூராட்சி.
ராதாபுரம் மேற்கு ஒன்றியம்: 1. கும்பிகுளம், 2. பரமேஸ்வரபுரம், 3. இராதாபுரம், 4. சமூகரெங்கபுரம், 5. சௌந்திரபாண்டியபுரம், 6. தெற்கு கள்ளிகுளம், 7. சிதம்பராபுரம், 8. கஸ்தூரிரெங்கபுரம், 9. கோட்டைகருங்குளம் ஆகிய 9 ஊராட்சிகள்.
ராதாபுரம் தெற்கு ஒன்றியம்: 1. கூடன்குளம், 2. கூத்தங்குழி, 3. திருவம்பலபுரம், 4. உதயத்தூர், 5. விஜயாபதி, 6. கரைச்சுத்து நவ்வலடி, 7. கரைச்சுத்து உவரி, 8. குட்டம், 9. உவரி ஆகிய 9 ஊராட்சிகள் என பிரிக்கப்பட்டது. DMK Internal Party Clash

ராதாபுரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர் ஜெகதீஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி இருவருமே அப்பாவுவின் தீவிர ஆதரவாளர்கள். தொகுதிக்குள் அப்பாவுவின் காருக்குள்தான் இருவரும் வலம் வருவார்கள். DMK Internal Party Clash
ஆனால் இப்போது இவர்கள் இருவர் வசம் இருக்கும் ஒன்றியத்தை தெற்கு என மூன்றாவதாக பிரித்து ராதாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக, வேறு ஒன்றியமான வள்ளியூர் தெற்கு லெவிஞ்சபுரம் ஊராட்சியைச் சேர்ந்த எரிக் ஜூடு என்பவரை ராதாபுரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமித்துள்ளார் மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன்.
இந்த பாகப் பிரிவினைக்குப் பின் மொத்தமுள்ள பூத்துகளில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி க்கு 35 பூத்களும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர் ஜெகதீஸுக்கு 20 பூத்களுமே ஒதுக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட தெற்கு ஒன்றியத்துக்கு 53 பூத்துகள் அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளன.

வி.எஸ்.ஆர் ஜெகதீஸ்
இவைதான் அப்பாவுவையும் அவரது ஆதரவாளர்களையும் கொந்தளிக்க வைத்திருக்கின்றன. நாம் இது தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்டத்தில் விசாரித்தபோது,
“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் 19 ஆயிரம் லீடிங் பெற்றுக் கொடுத்தோம். இதில் சுமார் 11, 500க்கு மேல் ராதாபுரம், கிழக்கு- மேற்கு ஒன்றியங்கள் பங்களிப்பு.

இப்படிப்பட்ட நிலையில் இந்த ஒன்றியம் முழுக்க முழுக்க அப்பாவுவிடம் இருப்பதால், அதில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தார் ஆவுடையப்பன். தனக்கு எதிராக அப்பாவுவின் ஆசியோடு அறிவாலயத்திடம் புகார் செய்பவர்களில் பெல்சியும், ஜெகதீஷும் முக்கியமானவர்கள் என்று ஆவுடையப்பனுக்குத் தெரியும். அதனால்தான் அப்பாவுவையும் பலவீனமாக்க வேண்டும், அவர்களையும் பலவீனமாக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு இந்த ஒன்றியப் பிரிப்பைச் செய்துள்ளார்,
அதன் அடிப்படையிலேயே ராதாபுரத்தை மூன்றாக பிரித்து தெற்கு ஒன்றியமாக்கி அதில் வேறு ஒன்றியமான வள்ளியூரைச் சேர்ந்த ஜூட் என்பவரை ஒன்றிய பொறுப்பாளராக்கியுள்ளார். இந்த ஜூடு முன்னாள் எம்பி ஞானதிரவியத்தின் தீவிர ஆதரவாளர். அப்பாவுவின் தீவிர எதிர்ப்பாளர். மீனவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்று இதை செய்துள்ளார்.

ஜோசப் பெல்சி
ஆவுடையப்பன் இப்படி ஒரு மூவ் செய்துகொண்டிருக்கிறார் என்பதை அறிந்து சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும்போதே கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரிடம் சட்டமன்றத்திலேயே சபாநாயகர் அப்பாவு நேரடியாக கடிதம் கொடுத்து கோரிக்கையும் வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘ராதாபுரம் ஒன்றியத்தை அரசியல் உள்நோக்கத்தோடு பிரிக்க ஆவுடையப்பன் திட்டமிட்டு வருகிறார், ராதாபுரம் ஒன்றியம் இரு ஒன்றியமாக ஆரோக்கியமாக செயல்பட்டு வருகிறது. அதனால் அதை பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி மீனவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று நினைத்தால், மிசாவுக்குப் பிறகு திமுக சார்பில் பலரும் தேர்தலில் போட்டியிடத் தயங்கிய நிலையில் போட்டியிட்ட உவரி ராயரின் உடன் பிறந்த சகோதரர் அல்போன்ஸ், அல்லது ஒன்றிய கவுன்சிலரும் மீனவர் நல வாரிய உறுப்பினருமான சேசுராஜ் இருவரில் ஒருவரை நியமிக்கலாம் என்றும் பரிந்துரைத்திருந்தார்.

முதல்வர், துரைமுருகனுக்கு கொடுத்த இந்த கடிதத்தை அப்போதே மாவட்ட பொறுப்பு அமைச்சர் நேரு, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர் ஆஸ்டின் ஆகியோருக்கும் கொடுத்தனுப்பினார்.
ஆனால் இதையெல்லாம் மீறி அப்பாவுவின் தொகுதியில் அப்பாவுக்கு பலமாக இருக்கும் ஒன்றியத்தில் வெளியூரைச் சேர்ந்த ஜூடுவை ஒன்றியச் செயலாளராக்கியிருக்கிறார் ஆவுடையப்பன்.
நேற்று முரசொலி பார்த்ததுமே சபாநாயகர் அப்செட் ஆகிவிட்டார். அவருடைய ஆதரவு ஒன்றிய செயலாளர்களும் தங்கள் அதிகாரம் குறைக்கப்பட்டதால் கோபத்தில் இருக்கிறார்கள்.
ஒரு ஒன்றியத்துக்கு வேறு ஒன்றியத்தில் இருந்து எப்படி ஒன்றிய செயலாளரை நியமிக்க முடியும். ’பென்’ உட்பட ஏதேதோ ஆய்வுகள் நடத்துவதாக சொல்கிறார்களே… அவர்களுக்கு இந்த சிம்பிள் உண்மை தெரியாதா? இதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். அப்பாவு ஆதரவு ஒன்றிய செயலாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து போராட்டம் நடத்தலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறார்கள். பொதுக்குழு முடிந்ததும் ஆவுடையப்பன் அப்பாவு பஞ்சாயத்து மீண்டும் நடக்கும்” என்கிறார்கள். DMK Internal Party Clash