சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. Resolution against Speaker appavu fail
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 17) சபாநாயகர் அப்பாவு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு, அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் சபாநாயகர் அப்பாவு அவையில் இருந்து வெளியேறினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவையை நடத்தினார்.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேசுவதை ஏன் ஒளிபரப்பு செய்வதில்லை? கடந்த 4 வருடங்களில் சட்டப்பேரவை 400 நாட்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் 116 நாட்கள் மட்டும் நடத்தியது ஏன்?
யாருடையை உத்தரவின் படி எதிர்கட்சி எம்எல்ஏக்கள் பேசும் போது சபாநாயகர் இடையூறு செய்கிறார்? சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தால் சபாநாயகர் கிண்டல் செய்கிறார். கருப்பு உடையில் அதிமுக எம்எல்ஏக்கள் வந்த போது டி.வி.யில் ஒளிபரப்பு செய்யாமல் இருட்டடிப்பு செய்தது ஏன்?” என்று கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையில் டிவிஷன் வாக்கெடுப்புக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி டிவிஷன் வாக்கெடுப்பு நடத்த துணைத் தலைவர் பிச்சாண்டி ஏற்பாடு செய்தார். பகுதி வாரியாக எண்ணி கழிக்கும் முறையில் டிவிஷன் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதிலும் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 63 பேர் ஆதரவு தெரிவித்தனர். 154பேர் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அறிவித்தார். Resolution against Speaker appavu fail