தொலைந்துபோன 70-களின் குழந்தைப்பருவம்… மீண்டும் கிடைக்குமா? – ட்ரெண்டாகும் ‘அனலாக்’ புரட்சி!

Published On:

| By Santhosh Raj Saravanan

analog childhood movement anxious generation low stim play parenting lifestyle tamil

மண்ணில் விளையாடிய கால்கள் இன்று வீடியோ கேமில் ஓடுகின்றன. மரத்தில் ஏறிய கைகள் இன்று மொபைலை ஸ்க்ரோல் செய்கின்றன. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது மகிழ்ச்சிதான்; ஆனால், அதற்காக நாம் நம் குழந்தைகளின் மன அமைதியை விலையாகக் கொடுக்க வேண்டுமா?

மேலை நாடுகளில் இப்போது தி அனலாக் மூவ்மென்ட்’ (The Analog Movement) என்றொரு புரட்சி வெடித்துள்ளது. இது தொழில்நுட்பத்திற்கு எதிரானதல்ல; தொழில்நுட்பத்திற்கு அடிமையாவதற்கு எதிரானது.

ADVERTISEMENT

ஏன் இந்த மாற்றம்? இன்றைய குழந்தைகள் அதிகப் பதற்றத்துடனும் (Anxious), மனச்சோர்வுடனும் காணப்படுகிறார்கள். Jonathan Haidt போன்ற உளவியல் நிபுணர்கள் இவர்களை “பதற்றமான தலைமுறை” (The Anxious Generation) என்றே அழைக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், சிறுவயதிலேயே கையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைதளங்கள். “என் பிள்ளை என்னைப் போலவே இயற்கையோடு ஒன்றி வளர வேண்டும்,” என்று நினைக்கும் பெற்றோர்கள், மீண்டும் 70-களின் பாணிக்குத் திரும்புகிறார்கள்.

மாற்றம் எதில் தொடங்குகிறது?

ADVERTISEMENT
  1. லோ-ஸ்டிம்’ (Low-Stim) விளையாட்டு: இன்றைய கார்ட்டூன்களும், வீடியோ கேம்களும் நொடிக்கு நூறு வண்ணங்களை மாற்றி, குழந்தைகளின் மூளையை அளவுக்கு அதிகமாகத் தூண்டுகின்றன (Over-stimulation). இதற்கு மாற்றாக, ‘அனலாக்’ பெற்றோர்கள் மரத்தாலான பொம்மைகள் (Wooden Toys), லெகோ, களிமண் போன்றவற்றை வழங்குகிறார்கள். “பொம்மை அமைதியாக இருந்தால்தான், குழந்தையின் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்,” என்பது இவர்களின் தாரக மந்திரம். அதேபோல, 70-களில் வந்த வேகம் குறைந்த கார்ட்டூன்களை மட்டுமே பார்க்க அனுமதிக்கிறார்கள்.
  2. லேண்ட்லைன் கலாச்சாரம்: இன்றைய வாட்ஸ்அப் (WhatsApp) உலகில், குரலைக் கேட்டுப் பேசும் பழக்கம் குறைந்துவிட்டது. ஆனால், இந்த இயக்கம் குழந்தைகளை ‘லேண்ட்லைன்’ (Landline) பாணியிலான தகவல் தொடர்புக்கு மாற்றுகிறது. ஸ்மார்ட்போன் கொடுப்பதற்குப் பதிலாக, அழைப்புகளை மட்டும் ஏற்கும் அடிப்படை வசதி கொண்ட போன்களைக் கொடுக்கிறார்கள். இது தேவையற்ற கவனச்சிதறலைத் தவிர்க்கிறது.
  3. ஸ்மார்ட்போனுக்கு ‘நோ’: உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வரை (High School) அல்லது 16 வயது நிரம்பும் வரை குழந்தைகளுக்குச் சொந்தமாக ஸ்மார்ட்போன் தருவதில்லை என்பதில் இவர்கள் உறுதியாக உள்ளனர். சமூக வலைதளங்களின் போலி பிம்பங்களும், ‘லைக்கிற்காக’ ஏங்கும் மனநிலையும் பிஞ்சுக் குழந்தைகளைப் பாதிக்கக் கூடாது என்பதே இதன் நோக்கம்.

போரடிப்பது நல்லது! “அம்மா போரடிக்குது” என்று குழந்தை சொன்னால், உடனே போனைத் தூக்கிக் கொடுப்பது இன்றைய வழக்கம். ஆனால், “போரடிப்பது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியம்,” என்கிறது அனலாக் இயக்கம். குழந்தை தனிமையில் இருக்கும்போதுதான் தனக்கான புதிய விளையாட்டுகளைக் கற்பனையில் உருவாக்கும்.

வீட்டிற்குள் வைஃபை (WiFi) சிக்னலை விட, சிரிப்பு சத்தம் அதிகம் கேட்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். இது வெறும் ஒரு ட்ரெண்ட் (Trend) அல்ல; இது ஒரு எச்சரிக்கை மணி. எந்திரங்களோடு பழகி எந்திரங்களாகவே மாறிக்கொண்டிருக்கும் நம் குழந்தைகளுக்கு, மீண்டும் மனிதத்தன்மையையும், நிதானத்தையும் கற்றுத்தரும் ஒரு முயற்சி. இந்த ‘அனலாக்’ வாழ்க்கையை நம் வீட்டிலும் வரவேற்போம்!

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share