உங்கள் துணையோ அல்லது நண்பரோ அடிக்கடி, “என் மேல கோபமா இருக்கியா?”, “என்னை உனக்குப் பிடிக்கலையா?”, “மெசேஜுக்கு ஏன் ரிப்ளை பண்ணல?” என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்களா? இதைத் தொல்லை என்று நினைக்காதீர்கள். அவர்கள் Anxious Attachment Style எனப்படும் ‘பதற்றமான பற்றுறுதி’ கொண்டவர்களாக இருக்கலாம்.
இவர்கள் உறவில் அதிக நெருக்கத்தை விரும்புவார்கள்; அதே சமயம், எங்கே நம்மை விட்டுத் துணை போய்விடுவாரோ என்ற பயம் இவர்களுக்கு எப்போதும் இருக்கும். இவர்களை எப்படிக் கையாள்வது?
1. நிலைத்தன்மை (Consistency) மிக முக்கியம்: இவர்களுக்குப் பெரிய சர்ப்ரைஸ்களை விட, தெளிவான நிலைத்தன்மைதான் பிடிக்கும். நீங்கள் ஒருநாள் மிக அன்பாகவும், மறுநாள் பாராமுகமாகவும் இருந்தால் அவர்கள் பதறிப்போவார்கள். உங்கள் அன்பிலும், நடத்தையிலும் ஒரு சீரான தன்மையைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் பிஸியாக இருந்தால், “நான் வேலையா இருக்கேன், அப்புறம் கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டுச் செல்லுங்கள். சொல்லாமல் மறைவது (Ghosting) இவர்களுக்குப் பெரும் எதிரி.
2. ஆறுதல் வார்த்தைகள் (Reassurance): சாதாரண மனிதர்களை விட இவர்களுக்குக் கூடுதல் உறுதிமொழி தேவைப்படும். “நான் இருக்கேன்”, “எப்பவும் உன்னை விட்டுப் போக மாட்டேன்” போன்ற சின்னச் சின்ன வார்த்தைகள் அவர்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும். அவர்கள் சந்தேகப்பட்டால், கோபப்படாமல், அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை உணர்த்துங்கள்.
3. வெளிப்படையான பேச்சு: அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தைப் பெரிதுபடுத்திச் சண்டை போட்டால், “நீ ஓவர் ரியாக்ட் பண்ற” என்று அவர்களை ஒதுக்காதீர்கள். அது அவர்களின் பாதுகாப்பற்ற உணர்வின் (Insecurity) வெளிப்பாடு. “உனக்கு என்ன தோணுதுனு சொல்லு, நாம பேசலாம்” என்று அவர்களுக்குச் செவி கொடுங்கள். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டாலே பாதிப் பிரச்சனை தீர்ந்துவிடும்.
4. கோபத்தைத் தவிருங்கள்: நீங்கள் மௌனமாக இருந்தால் (Silent Treatment), அவர்கள் அதை “பிரிவு” என்று தவறாகப் புரிந்துகொள்வார்கள். சண்டை வந்தால் கூட, “எனக்குக் கொஞ்சம் டைம் வேணும், ஆனா நான் திரும்ப வந்து பேசுவேன்” என்று சொல்லிவிட்டு விலகுங்கள். இது அவர்களுக்குப் பாதுகாப்பான உணர்வைத் தரும்.
5. எல்லையை நிர்ணயிக்கவும் (Set Boundaries): அவர்களுக்காக உங்கள் எல்லா வேலைகளையும் விட வேண்டும் என்பதில்லை. “இப்போ எனக்கு வேலை இருக்கு, ஆனா சாயங்காலம் நாம கண்டிப்பா பேசலாம்” என்று அன்பாகச் சொல்லிப் புரிய வையுங்கள். அன்புக்கும், அடிமைத்தனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரிய வைப்பது அவசியம்.
பதற்ற மனநிலை கொண்டவர்கள் அதிக அன்பு கொண்டவர்கள். அவர்களின் பயத்தைப் போக்கி, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை (Secure Feel) நீங்கள் உருவாக்கிக் கொடுத்தால், அவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் அன்பிற்கும், விசுவாசத்திற்கும் ஈடு இணையே இருக்காது!
