உருளைக்கிழங்கு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது வெளிர் பழுப்பு நிறத் தோலும், வெள்ளை அல்லது மஞ்சள் நிற உட்பகுதியும் கொண்ட கிழங்குதான். உருளைக்கிழங்கு வறுவல், மசாலா, சிப்ஸ், பூரி மசாலா என நம்முடைய அன்றாட உணவில் உருளைக்கிழங்குக்கு முக்கியமான இடம் உண்டு.
ஆனால் தோல் மட்டுமல்லாமல் உள்ளேயும் ஊதா நிறத்தில் இருக்கும் உருளைக்கிழங்கைப் பார்த்திருக்கிறீர்களா? இதுவும் நாம் சாப்பிடும் உருளைக்கிழங்கின் ஒரு வகைதான். குறிப்பாக இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ‘குஃப்ரி ஜமுனியா’ (Kufri Jamunia) என்ற ரகம், அதன் வித்தியாசமான நிறத்தாலும் அதிக ஊட்டச்சத்துகளாலும் கவனம் பெற்றுள்ளது.
இந்த ஊதா உருளைக்கிழங்கில் சாதாரண உருளைக்கிழங்கை விட அதிக வைட்டமின் சி, இரும்புச்சத்து, துத்தநாகம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CPRI) உருவாக்கிய இந்த ரகத்தின் சிறப்புகள் குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) இன்று (அக்டோபர் 18-ந் தேதி) விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஊதா உருளைக்கிழங்கு எப்போது உருவாக்கப்பட்டது?
இந்தியாவில் அதிக ஊட்டச்சத்துகளைக் கொண்ட வண்ண உருளைக்கிழங்கு ரகங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக 2018-ம் ஆண்டு ஊதா நிறத் தோலைக் கொண்ட ‘குஃப்ரி நீலகண்ட்’ ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2021-ம் ஆண்டு சிவப்பு நிறத்திலான ‘குஃப்ரி மாணிக்’ ரகம் வெளியிடப்பட்டது.
2024-ம் ஆண்டு ‘குஃப்ரி ஜமுனியா’ என்ற ஊதா நிற உருளைக்கிழங்கு ரகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இதன் தோல் அடர் ஊதா நிறத்திலும், உட்பகுதி ஊதா நிறத்திலும் காணப்படும். ஊதா உருளைக்கிழங்கிற்கு இந்த நிறத்தைத் தருவது ‘ஆந்தோசயனின்’ என்ற இயற்கையான தாவர நிறமிதான். நாவல் பழம், கருப்பு திராட்சை போன்றவற்றிலும் இந்த நிறமி உள்ளது. இது உடலில் உள்ள செல்கள் சேதமடைவதைக் குறைக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டது.
சாதாரண உருளைக்கிழங்கை விட என்னென்ன சத்துகள் அதிகம்?
நாம் தினமும் சாப்பிடும் சாதாரண உருளைக்கிழங்கிலும் உடலுக்குத் தேவையான சத்துகள் இருக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப்புச் சக்திக்கு உதவும் வைட்டமின் சி, ரத்தத்திற்கு அவசியமான இரும்புச்சத்து, உடல் வளர்ச்சிக்கும் காயங்கள் ஆறுவதற்கும் உதவும் துத்தநாகம் ஆகியவை உள்ளன. ஆனால் இந்தச் சத்துகள் சாதாரண உருளைக்கிழங்கை விட ‘குஃப்ரி ஜமுனியா’ என்ற ஊதா உருளைக்கிழங்கில் அதிகமாக இருப்பதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
100 கிராம் சாதாரண உருளைக்கிழங்கில் 23.15 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. அதே அளவிலான குஃப்ரி ஜமுனியா உருளைக்கிழங்கில் 42.75 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது.
அதேபோல சாதாரண உருளைக்கிழங்கில் 0.28 மில்லிகிராம் துத்தநாகம் உள்ள நிலையில், ஊதா உருளைக்கிழங்கில் 2.28 மில்லிகிராம் உள்ளது.
இரும்புச்சத்தைப் பொறுத்தவரை சாதாரண உருளைக்கிழங்கில் 0.57 மில்லிகிராமும், ஊதா உருளைக்கிழங்கில் 3.22 மில்லிகிராமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒப்பீட்டின்படி சாதாரண உருளைக்கிழங்கை விட குஃப்ரி ஜமுனியாவில் வைட்டமின் சி சுமார் 1.85 மடங்கும், துத்தநாகம் 8 மடங்குக்கும் அதிகமாகவும், இரும்புச்சத்து 5 மடங்குக்கும் அதிகமாகவும் உள்ளது.
இவை குறிப்பிட்ட உருளைக்கிழங்கு ரகங்களை ஒப்பிட்டு வெளியிடப்பட்ட தரவுகள். எல்லா ஊதா உருளைக்கிழங்குகளிலும் இதே அளவு ஊட்டச்சத்துகள் இருக்கும் என்று பொருளல்ல.
ஊதா உருளைக்கிழங்கைச் சாப்பிட்டால் என்ன நன்மைகள்?
வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டுக்கும், காயங்கள் ஆறுவதற்கும், உடலில் கொலாஜன் உருவாவதற்கும் உதவுகிறது. நாம் சாப்பிடும் தாவர உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கும் வைட்டமின் சி பயன்படுகிறது.
இரும்புச்சத்து உடலில் ஹீமோகுளோபின் உருவாகவும், ரத்தத்தின் மூலம் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படவும் அவசியமானது.
துத்தநாகம் உடலின் நோய் எதிர்ப்புச் செயல்பாடு, செல்களின் வளர்ச்சி, காயங்கள் ஆறுதல் உள்ளிட்ட பல செயல்பாடுகளுக்கு உதவும் முக்கியமான நுண்ணூட்டச்சத்தாகும்.
இந்தச் சத்துகள் குஃப்ரி ஜமுனியா உருளைக்கிழங்கில் அதிகமாக இருப்பதால், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு இது ஒரு கூடுதல் வாய்ப்பாக இருக்கலாம்.
மேலும், ஊதா உருளைக்கிழங்கில் இயற்கையாகவே நிறத்தைத் தரும் சத்துகளும் உள்ளன. இவை உடலில் உள்ள செல்கள் சேதமடைவதைக் குறைக்க உதவும் தன்மை கொண்டவை.
குஃப்ரி ஜமுனியாவின் 100 கிராம் உட்பகுதியில் 42.05 மில்லிகிராம் ஆந்தோசயனினும், தோலில் 80.66 மில்லிகிராமும் இருப்பதாக மத்திய அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதா உருளைக்கிழங்கில் என்னென்ன சமைக்கலாம்?
ஊதா நிறத்தில் இருப்பதால் இந்த உருளைக்கிழங்கை எப்படிச் சமைப்பது என்ற சந்தேகம் ஏற்படலாம். ஆனால் வழக்கமான உருளைக்கிழங்கைப் போலவே இதையும் பல உணவுகளில் பயன்படுத்தலாம்.
குஃப்ரி ஜமுனியா ரகம் மாவுத்தன்மையும் நல்ல சுவையும் கொண்டதாக இருப்பதாக மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாம் வழக்கமாகச் சாப்பிடும் உருளைக்கிழங்கைப் போலவே ஊதா உருளைக்கிழங்கையும் சமைத்துச் சாப்பிடலாம். உருளைக்கிழங்கு வறுவல், மசாலா, கூட்டு போன்ற உணவுகளைத் தயாரிக்கலாம். பூரி மசாலாவிலும் பயன்படுத்தலாம். நிறம் மாறுபட்டிருந்தாலும் சமையலில் இதைப் பயன்படுத்துவதில் பெரிய வித்தியாசம் இல்லை.
ஊதா உருளைக்கிழங்கிலிருந்து மாவு தயாரிக்கலாம். இந்த மாவை இட்லி, தோசை மாவுடன் கலந்து பயன்படுத்தலாம். சூப், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.
வழக்கமான உருளைக்கிழங்கை விட இதில் ஊட்டச்சத்துகள் அதிகமாக இருப்பது ஒரு சிறப்பாக இருந்தாலும், எந்த முறையில் சமைத்துச் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். குறிப்பாக அதிக எண்ணெயில் பொரித்துச் சாப்பிடுவதற்குப் பதிலாக வேகவைத்தோ, குறைந்த எண்ணெயில் சமைத்தோ சாப்பிடுவது நல்ல தேர்வாக இருக்கும்.
விவசாயிகளுக்கு என்ன பயன்?
இந்த ஊதா உருளைக்கிழங்கு உணவுக்காக மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
சாதாரண உருளைக்கிழங்கு ரகங்களைப் போலவே, ஊதா நிறத்திலான குஃப்ரி ஜமுனியா உருளைக்கிழங்கும் சுமார் 90 முதல் 100 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
ஒரு செடியில் 10 முதல் 12 உருளைக்கிழங்குகள் வரை உருவாகும். பரிந்துரைக்கப்பட்ட சாகுபடி முறைகளில் ஒரு ஹெக்டேருக்கு 32 முதல் 35 டன் விளைச்சல் கிடைக்கும்.
மேலும், அறுவடை செய்த பிறகு இந்த உருளைக்கிழங்கு விரைவில் முளைக்காது. நீண்ட நாட்கள் வைத்திருந்தாலும் எளிதில் அழுகாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த ரகத்தைச் சேமித்து விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் வழக்கமான உருளைக்கிழங்கை விட அதிக விலை கிடைக்குமா என்பது உள்ளூர் சந்தையின் தேவையைப் பொறுத்தது.
நம்ம ஊரில் ஊதா உருளைக்கிழங்கு கிடைக்குமா?
தமிழ்நாட்டில் உருளைக்கிழங்கு சாகுபடி புதிதல்ல. நீலகிரி மாவட்டத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் உருளைக்கிழங்கு சாகுபடி நடைபெற்று வருகிறது.
ஆனால் குஃப்ரி ஜமுனியா ரகம் தமிழ்நாட்டில் சாகுபடி செய்வதற்காக அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்படவில்லை.
இந்த ரகத்தை வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியச் சமவெளிப் பகுதிகளில் சாகுபடி செய்வதற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரைத்துள்ளது.
ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலத்தின் சமவெளிப் பகுதிகள், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், ஒடிசா, அசாம், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்கள் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
