Aiadmk announce protest dmk march 12
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழக காவல்துறையையும், திமுக ஆட்சியையும் கண்டித்து மார்ச் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 8) தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,
“தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. போதைப்பொருள் புழக்கம் குறித்து சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கையின் போது பேசினேன்.
பள்ளி, கல்லூரி அருகில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவது குறித்து திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
ஆனால், ஸ்டாலின் தலைமையில் இயங்கும் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், இன்றைக்கு தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கிறது.
பிப்ரவரி 15-ஆம் தேதி டெல்லியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தலில் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளர் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்தன. இதனை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது. அப்படிப்பட்ட நபர் உயர்ந்த காவல்துறை பதவியில் உள்ள டிஜிபியை சந்தித்து பரிசு பெறுகிறார்.
முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆகியோரை சந்தித்திருக்கிறார்.
காவல் உயர் அதிகாரிகள் மற்றும் முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமாக நட்பு வைத்துக்கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
ஜாபர் சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.
திமுக அமைப்பு செயலாளர் ஏதோ சம்பிரதாயத்திற்காக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் குடும்பம் தொடர்புடைய விஷயமாக இருப்பதால், நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை ஸ்டாலினுக்கு உள்ளது.
2022- 23 காவல்துறை மானியக்கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட கொள்கை விளக்க குறிப்பில், ‘கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பாக நுண்ணறிவு தகவல் சேகரிக்கப்பட்டு 2,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ளவர்களை ஏன் கைது செய்யவில்லை? மற்றவர்கள் எல்லாம் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி வழக்கில் இருந்து தப்பியுள்ளார்கள். காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
போதைப்பொருளை கட்டுபடுத்த தவறிய தமிழக காவல்துறையையும், திமுக ஆட்சியையும் கண்டித்து மார்ச் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
வணங்காமுடி, செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Manjummel Boys: ஒரேயடியாக ‘உயர்ந்த’ விலை… ஓடிடி ரிலீஸ் எப்போது?