மகளிர் தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், ஒளவையார் படத்திற்கு ஆளுநர் ரவி இன்று (மார்ச் 8) மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேசிய அவர், “பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றம் என்ற வெற்று முழக்கங்களில் இருந்து உண்மையான பெண்கள் முன்னேற்றத்தை நோக்கி நாம் நகர்ந்துள்ளோம்.
பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கழிப்பிட வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பல கல்வி நிறுவனங்களிலும் ஆண்களை விட பெண்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது.
பெண்கள் தங்கள் உடல் நலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் 40 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தில் 23 லட்சம் கோடி ரூபாய் அவர்கள் கடனாக பெற்றுள்ளனர்.
பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 1.20 கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளிலும் பெண்கள் இணை உரிமையாளர்களாக உள்ளனர்.
அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 2047-ஆம் ஆண்டு இந்தியா 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, நாட்டில் பெண்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை’ எனும் மகாகவி பாரதியின் கனவை நினைவாக்குவோம்.
பத்திரிகையாளர் நண்பர்களே, வரும் நாட்களில் நான் உங்களை சந்திக்கிறேன். அப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.