பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள வசதிகளை பயன்படுத்தினாலும், பிரசவத்திற்குப் பெரிய மருத்துவமனைகளுக்கு தான் செல்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள பெண்களிடம் பிரசவத்திற்கு எந்த மருத்துவமனைக்கு செல்கிறார்கள் என்பது தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்காக 1,143 தாய்மார்களை அணுகியதில் 865 பேர் ஆய்வில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆய்வின் முடிவுகள் மாநில பொது சுகாதார இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 538 (62%) பெண்கள் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகளிலே பிரசவித்துள்ளனர். இதில் கிராமப்புறங்களில் 75% பெண்களும், நகர்ப்புறங்களில் 50% பெண்களும் அடங்குவர் என்று ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான மூத்த பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஏ.சோமசுந்தரம் கூறினார்.
மேலும் பிரசவத்தை பதிவு செய்வதற்கும், பிரசவத்திற்கு முந்தைய சேவைகளைப் பெறுவதற்கும் மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைப்படுகின்றன. இதற்கு காரணமாக அவை வீட்டிற்கு அருகிலும், கூட்டம் அதிகமாக இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 பிரசவங்களில் ஒன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடக்கிறது. கடந்த 10 வருடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் பிரசவங்கள் 28.3% இல் இருந்து 10% ஆக குறைந்துள்ளதாக அரசாங்க பதிவுகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் பெண்கள் பிரசவத்திற்கான இடத்தை அதன் தூரம், வசதி, திறமையான பணியாளர்கள் மற்றும் மருந்துகளின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கிராமப்புறங்களில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து சுகாதாரப் பணியாளர்கள் தாய்மார்களை களப் பணியாளர்கள் மூலம் சென்றடைகிறார்கள்.
ஆனால் நகர்ப்புறங்களில், ஆரம்ப சுகாதார உள்கட்டமைப்பு வலுவாக இல்லை. நகர்ப்புறத்தில் உள்ள குடிசை பகுதிகளில் மட்டுமே களப்பணியாளர்களின் பங்கு இருக்கிறது.
இதனால் நகரங்களில் உள்ள பெரும்பாலான பெண்கள் தனியார் மருத்துவமனைகளை எளிதாக அணுகுகிறார்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்தான் அதிக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. அவை தாய்மார்கள் பிரசவத்திற்கு அணுகக்கூடியதாக உள்ளது.
இது குறித்து பொது சுகாதார இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறும்போது,
“மக்களின் நோய் தடுப்பு மற்றும் ஆரம்ப சுகாதாரத் தேவைகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிக பங்கு வகிக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் பரிசோதனை, மருந்துகள், ஆலோசனைகளை நோயாளிகளுக்கு வழங்குகின்றன.
குறிப்பாக நோயாளிகள் வருகையின் போது மருத்துவரைச் சந்திக்கும்படி நினைவூட்டுகின்றன.

பெண்கள் தடுப்பூசிகள் எடுத்து கொள்வதோடு அவர்களது குழந்தைகளையும் தடுப்பூசி போடுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்து வருகிறார்கள்.
ஆனால் பிரசவம் என்று வரும் போது வெவ்வேறு காரணிகள் அவர்களை பெரிய மருத்துவமனைகள் நோக்கி திரும்ப வைக்கின்றன.
இந்த ஆய்வின் நோக்கம் ஆரம்ப சுகாதார வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதாகும்” என்று அவர் தெரிவித்தார்.
மோனிஷா
பிரதமர் மோடி செல்வாக்கு அதிகரிப்பு: கருத்துக்கணிப்பில் தகவல்!
